பிரபல பாமக பிரமுகர் கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது

2019 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளனர்.  

பிரபல பாமக பிரமுகர் கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க பிரமுகரும், பாத்திரக்கடை நடத்தி வந்தவருமான ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றத்தை தட்டிக் கேட்டதால்தான் அவர் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததுடன் அதில் 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஏ.எஸ்.பி சவுகத் அலி தலைமையில் 4 பேர் கொண்ட குழு இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் 6 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக என்.ஐ.ஏ அறிவித்து அவர்களைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்தது. மேலும், ரெஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹாதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகிய 6 பேருக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் 11வது குற்றவாளியான ரெஹ்மான் சாதிக் இரண்டரை ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து இன்று பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தீவிரமாக தேடி வருவதாகவும் தலவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.