"2100ல் சென்னையின் 16% பகுதிகள் கடலில் முழ்கும்" அதிர்ச்சி தரும் காலநிலை அறிக்கை வெளியீடு!

"2100ல் சென்னையின் 16% பகுதிகள் கடலில் முழ்கும்" அதிர்ச்சி தரும் காலநிலை அறிக்கை வெளியீடு!

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை செப்டம்பர் மாதம் சி40 அமைப்பு வெளியிட்டது. இதில் சென்னையின் காலநிலை மாற்றம், பசுங்குடில் வாயுவின் இருப்பு மற்றும் இடர் மதிப்பீடு, காலநிலை மாற்ற அபாய மதிப்பீடு, காலநிலையால் சென்னைக்கு ஏற்படும் ஆபத்து மற்றும் பாதிப்பு, அதிக மழைப்பொழிவு, வெள்ள அபாயம், உள்கட்டமைப்பு, எதிர்காலங்கள் ஏற்படக்கூடிய வெள்ள அபாயம், கடல் மட்ட உயர்வு, அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம் ஆகியவை குறித்து எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், COP 26 மாநாட்டில் 2070ம் ஆண்டுக்குள் இந்தியா கரிம சமநிலையை அடையும் என கூறப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாக 2050ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு கரிம சமநிலையை எய்திட வேண்டும் என்ற முதலமைச்சரின் கூற்றை இலக்காக கொண்டு 6 தலைப்புகளில் செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு இருந்து.

குறிப்பாக, இந்த அறிக்கையில் கடல் மட்டம் உயர்வால் 2100ம் ஆண்டில் சென்னையில் 16 சதவீத பகுதிகள் கடலில் முழ்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 28 பேருந்து நிறுத்தங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள், 4 புறநகர் ரயில் நிலையங்கள், 2 மின் நிலையங்கள் கடலில் முழ்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்தில் 400 பேர் தங்களின் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்தக் கருத்துகளை பரிசீலனை செய்து இறுதி வரைவு அறிக்கை தயார் செய்யும் பணியில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் ஈடுபட்டது. அதன்படி, சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட இறுதி வரைவு அறிக்கை கடந்த டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவ்வறிக்கையை வெளியிட்டார்.

இதன் அடிப்படையில் பல்வேறு காலநிலை மாற்ற பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாகு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:போலீஸ் ஜீப்பை கடத்திய இளைஞர் கைது!