நீதிமன்றங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும்-சீமான்!

உலகப்பொதுமறை தந்த தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார் தனது குறட்பாவில், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்' எனக்கூறி, எதிர்நின்று எவருமே கேள்வி கேட்க முடியாத பெரும் எதேச்சதிகாரப்போக்கால் கட்டமைக்கப்பட்ட முடியாட்சியிலேயே ஆளும் அரசனின் குறைகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும்;

நீதிமன்றங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும்-சீமான்!

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல எனவும், சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும்

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். ‘நீதிமன்றங்கள், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்' என்கிற அவரது வாதம் ஏற்கப்படவேண்டிய ஒன்றுதான். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிற நீதிமன்றங்கள் எந்தத் தவறும் இழைத்துவிடக்கூடாது என்கிற நோக்கம் மிகச்சரியானது.

தனி நபர் கருத்தால் நீதித்துறை களங்கப்படுவதில்லை

அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புச்சட்டம், தனிநபருக்கான கருத்துரிமையையும், நீதிமன்றத்திற்கான பாதுகாப்பையும் சமமாக உறுதி செய்கிற நிலையில், தனிநபர் ஒருவரின் கருத்தால் நீதித்துறை முற்றாகக் களங்கப்படுகிறதென்பது ஏற்கக்கூடியதாக இல்லை. ஒரு எளிய மகன் அதிகார வர்க்கத்தை நோக்கிக் கேள்வியெழுப்புவதும், ஆட்சியாளர்களை விமர்சனத்துக்கு உட்படுத்துவதுமான கருத்துரிமையை உறுதிசெய்வதுதான் மக்களாட்சித்தத்துவத்தின் மகத்துவமாகும்.

உலகப்பொதுமறை தந்த தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார் தனது குறட்பாவில், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்' எனக்கூறி, எதிர்நின்று எவருமே கேள்வி கேட்க முடியாத பெரும் எதேச்சதிகாரப்போக்கால் கட்டமைக்கப்பட்ட முடியாட்சியிலேயே ஆளும் அரசனின் குறைகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும்;

நீதிபதிகள் மறுக்க முடியுமா?

இன்றைய நீதிபதிகள், வழக்கறிஞர்களாக இருந்த கடந்த காலங்களில், ‘நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் அல்லர்’ என்று விமர்சித்த வரலாற்றை மறுக்க முடியுமா? நீதி தவறினால் உடனே உயிரை மாய்த்துக்கொள்ள இன்றைக்கு நீதித்துறையில் உள்ளவர்கள் அனைவரும் நீதி வழுவா பாண்டிய நெடுஞ்செழியர்களா? அல்லது மகன் மீது தேரேற்றி மாட்டுக்கு நீதி சொன்ன மனுநீதிச்சோழர்களா? என்கின்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது

ஆகவே, தம்பி சவுக்கு சங்கரின் அடிப்படையான நோக்கத்தையும், தனி நபர் சனநாயக உரிமையைக் கருத்தில கொண்டும் அவருக்கு வழங்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனையை, மாண்புமிகு உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து அவரை விடுவிக்க வேண்டுமெனக் கோருகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.