மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன், சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ், கிராம கணக்குகளில் உரிய மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். அத்துடன் பட்டா மறுதல்கள் பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவித்தார். 10-க்கும் குறைவாக உள்ள குடியிருப்புகள் மற்றும் லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளின் பொது பயன்பாட்டிற்கான, மின் கட்டணம் 8 ரூபாயில் இருந்து, 5 ரூபாய் 50 காசுகளாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

அத்துடன், ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால், இன்று முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறினார்.