இந்தியா - பாகிஸ்தான் போரின் 50ஆவது ஆண்டு வெற்றிவிழா... கன்னியாகுமரியில் தீபம் ஏற்றி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்...

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைப்பெற்ற போரின் 50 ஆவது ஆண்டு  வெற்றி விழா கன்னியாகுமரி கடற்கரையில் இந்திய ராணுவத்தினர் தீபம் ஏற்றி கொண்டாடினர்.

இந்தியா - பாகிஸ்தான் போரின் 50ஆவது ஆண்டு வெற்றிவிழா... கன்னியாகுமரியில் தீபம் ஏற்றி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்...

இந்தியா பாகிஸ்தான் இடையே நடைப்பெற்ற போரானது 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த முப்படையினரும் கன்னியாகுமரி கடற்கரையில் இந்தியா சார்பில் வெற்றி தீபம் ஏற்றி கொண்டாடினர். 

1971 ம் ஆண்டு நடைப்பெற்ற போரில் இந்திய ஆயுதப்படைகள் பெற்ற வெற்றியை நினைவுகூறும் வகையில் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. தேசிய போர் நினைவுச் சின்னத்தின் ஜோதி சுடரிலிருந்து நான்கு வெற்றி ஜோதிகள் எடுக்கப்பட்டு , ஒவ்வொன்றும் 1971 ஆம் ஆண்டு போர் வீரர்கள் வாழும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக நான்கு திசைகளுக்கு கொண்டு செல்லப் படுகின்றன. தெற்கு திசையின் வெற்றி ஜோதி சுடர் ஐ.என்.எஸ் கட்டப்பொம்மன் தளத்திற்கு வந்து சேர்ந்த போது தளபதி கேப்டன் ஆஷிஷ் கே ஷர்மா மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஜோதியினை பெற்றுக் கொண்டனர்.

அதேபோல் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்த போது மாவட்ட போலீஸ் எஸ்.பி.பத்ரி நாராயணன், நாகர்கோவில் துணை ஆட்சியர் சிவகுருநாதன், கன்னியாகுமரி டி எஸ் பி ராஜா ஆகியோர் வெற்றி ஜோதிக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இரண்டு நிமிடம்  மவுனம் கடைபிடிக்கப்பட்டது.

1971 வெற்றியைக் குறிக்கும் போர் வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஒரு கலாச்சார நிகழ்வினை பெண்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து நடத்தினர். மேலும் கோரோனா விதிமுறைகளை பின்பற்றி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நாளை 13 ஆம் தேதி, வெற்றி தீபம் புறப்பட்டு  தூத்துக்குடி மாவட்டம் வழியாக என்.சி.சி வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் கடலோர காவல்படையால் வெற்றிசுடர் மதுரை நோக்கி சென்று ஐ.என்.எஸ் இடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.