சுங்கச்சாவடிக்கு அபராதம் விதித்து நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி!

சுங்கச்சாவடிக்கு அபராதம் விதித்து நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி!

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு பராமரிப்பு சரியில்லை என‌ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ 400 கோடி அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பயண நேரத்தை கணிசமான அளவிற்கு குறைப்பது, வாகன நெரிசல் இல்லாத விரைவான பயணம், தரமான சாலைகளில், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் என்று பல சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட தங்க நாற்கர சாலைகள் உட்பட இந்தியா முழுவதும் அறிமுகமான புதிதில் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை நிறுவி, கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு அனுமதித்து வந்தனர். சுங்கச்சாவடிக் கட்டணம் செலுத்தினாலும் விரைவான, பாதுகாப்பான பயணம், தரமான சாலை என்று மக்கள் ஆர்வமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

தரமிழந்து காணப்படும் நெடுஞ்சாலைகள் 

வருடங்கள் ஓட, பல நெடுஞ்சாலைகள் தரமிழந்து காணப்படுகின்றன. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. ஆந்திர மாநில தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுங்கச்சாவடி, கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகளுடன் சுங்க கட்டணம் வசூலித்து வந்த‌து. கடந்த 2021ம் ஆண்டு, இந்த சுங்கச்சாவடிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல பணிகள் முடிக்கப்பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து பணிகளை  முடிக்கும்படி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.  

அபராதம் விதித்த நெடுஞ்சாலை ஆணையம்

இந்நிலையில், தூத்துக்குடி மதுரை நான்குவழிச் சாலையில் விளக்குகள் பொருத்தாதது, எதிரே வரும் வாகங்கள் கண் கூசாமல் இருக்க சாலையின் நடுவே செடிகள் வைக்காமல் இருப்பது, இரு பக்கமும் எல்லையை குறிக்கும் வண்ணக்கோடுகள், பாதசாரிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், கழிப்பறை வசதிகள், இணைப்புச்சாலை குறியீடு, பல இடங்களில் பேருந்து நிறுத்தம் இல்லாதது, சிப்காட் அருகே ரயில்வே மேம்பாலம் போடப்படாததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து அரசின் உத்தரவை பின்பற்ற தவறியதாக அந்நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி ரூபாயை அபராதம் விதித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது இது போன்ற எந்த அறிவிப்பும் எங்களுக்கு இதுவரை வரவில்லை என தெரிவித்த சுங்கச்சாவடி மேலாளர், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இயக்கப்படுவது குறித்து அப்பகுதிக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்ராஜிடம் இதுவெல்லாம் எங்களது வேலை இல்லை என சுங்கச்சாவடி மேலாளர் ஆக்ரோசமாக பேச வேல்ராஜ் உடன் வந்த வேன் ஓட்டுனர்கள் பலரும் சேர்ந்துகொண்டு மாநகாரட்சியில் இருந்து 15 கிமீ அப்பால் இயக்க வேண்டிய சுங்கச்சாவடி இங்கு அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சுங்கச்சாவடி நுழைவுப்பகுதி முழுவதும் குண்டும் குழியுமாக பாராமரிப்பின்றி உள்ளதை சுட்டிக்காட்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி

பின்னர் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் டோல்கேட் அமைக்க வேண்டிய இடம் வாலசமுத்திரம் கிராமம் தான். ஆனால் கிழக்கு கடற்கரைக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கும் வகையில் புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டது. மாநகராட்சி பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் தாண்டியே அமைக்கப்பட வேண்டும் என்பது நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி. ஆனால், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூர தொலைவிலேயே அமைந்துள்ளது. தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் அருகில் உள்ள கிராம மக்கள், உப்பளத்திற்கு செல்லும் லாரி உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த  சுங்கச்சாவடியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. ரோட்டின் நடுவே வைக்கப்பட வேண்டிய செடிகள் கூட வைக்காமல் உள்ளது என்றார்.விரைவில் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.