ஆளுநர் ரவியும் கட்டுரைப் போட்டி சர்ச்சையும்...

ஆளுநர் ரவியும் கட்டுரைப் போட்டி சர்ச்சையும்...

தி.மு.க வுடன் மீண்டும் பிரச்சினை ஏற்படும் வகையில்  தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய செம்மொழி நிறுவனம் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு:

தமிழ்நாட்டில் ஆளுநர் போட்டியை அறிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  மொழிப் பிரச்சினை, இந்தி திணிப்பு போன்ற பல விவகாரங்களில் ஏற்கனவே திமுகவுடன் மோதல் கொண்டிருக்கும் ஆளுநர் புதிதாக மற்றொரு பிரச்சினைக்கு புள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.  1960 களில் இருந்தே இந்தி மொழி திணிப்பு எதிர்க்கப்படும் மாநிலத்தில் இந்தி மொழியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆளுநர் மறைமுகமாக அவருடைய குடியரசு தினவிழா உரையின் போது பேசியுள்ளார். 

கட்டுரைப் போட்டி:

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளி அளவிலான போட்டியில் பங்கேற்று 'எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரர்' என்ற தலைப்பில் தங்கள் கட்டுரைகளை அனுப்பலாம் எனவும் கல்லூரி பயிலும் மாணவர்கள் கல்லூரி அளவிலான போட்டியில் பங்கேற்று ’2047-ல் இந்தியா உலகத் தலைவராக மாறும்’என்ற தலைப்பில் தங்கள் உள்ளீடுகளை அனுப்பலாம் ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தமிழ் கட்டுரைகள் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், ஆனால் ஆங்கிலக் கட்டுரைகள் ஆளுநர் துணை வேந்தராக இருக்கும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த நபர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள்  கட்டுரையை மதிப்பிட்டு வெற்றியாளர்களை அறிவிக்கும் என்றும், ஒவ்வொரு பிரிவிலும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15, 2022 அன்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் தன்னிச்சை முடிவும் எதிர்ப்பும்:

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர் பதவி வெறும் சம்பிரதாயமான பதவியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாட்டில் தலையிடாமல், பதவியில் இருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவிர , ஆளுநர் எதைச் செய்தாலும் அது சட்டவிரோதமானது. அதை ஆளுநர் ரவி புரிந்து கொள்ள வேண்டும்,” என்று கூறியுள்ளார் விசிக பொதுசெயலாளர் ரவிக்குமார்.

ஆளுநர் ரவி அரசியலமைப்பு  சட்டத்தை  கையில் எடுத்துக்கொண்டு கூடுதல் அதிகாரமாக நடந்து கொள்கிறார். இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதற்கு தன்னிச்சயாக அறிவிப்புகளை வெளியிடும் அளவிற்கு சென்றுவிட்டார் என்று எஸ்பிசிஎஸ்எஸ்-தநா பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.

கட்டுரைப் போட்டிகளை நடத்துவதற்கான தன்னிச்சையான அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் எனவும் அதிருப்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.