வாகன பறிமுதலில் பின்பற்றப்படாத வழிமுறைகள்... வழிகாட்டிய உயர் நீதிமன்றம்!

வாகன பறிமுதலில் பின்பற்றப்படாத வழிமுறைகள்... வழிகாட்டிய உயர் நீதிமன்றம்!

போதை பொருள் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என வழிமுறைகளை வகுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாகூர் கனி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கஞ்சா கடத்தியதாக தன் மீது 2018  ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனக்கு சொந்தமான ஜீப் வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் உள்ள தனது வாகனத்தை  தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழ் நாடு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.செந்தில்குமார் ஆஜராகி மனுதாரர் வழக்கில், இரண்டாவது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு போதை தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க || கைதான புல்லிங்கோஸ், கை வலியில் கதறல்...பரிதாபப்பட்டு மாவுக்கட்டு போட்ட போலீசார்!

போதைப் பொருள் கடத்தும் போது பறிமுதல் செய்யபட்ட  வாகனங்கள் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல், விசாரணை நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களும், வாகனங்கள் குவிந்து கிடக்கின்றது. பல ஆண்டுகளாக இதுபோல் வெயில், மழை என அனைத்து காலங்களிலும் கேட்பாரின்றி கிடக்கிறது, என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மனுதாரரின் வாகனம் கஞ்சா கடத்திய போது சிறப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி தீர்ப்பு வழங்கி மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி இளந்திரையன். 

மேலும், கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யக்கூடிய வாகனங்கள் மற்றும் சொத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து போதை தடுப்பு பிரிவு சட்டங்கள் மற்றும்  உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழி முறைகளை, பல வழக்குகளில் வழங்கி உள்ளது.

இதையும் படிக்க || "திமுக தொண்டர்கள் நினைத்தால், ஆடு பிரியாணியாக ஆக்கப்படும்", ஆர் எஸ் பாரதி காட்டம்!

ஆனால், இதனை விசாரணை நீதிமன்றம், விசாரணை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை. எனவே இந்த வழக்கில் வாகனங்கள் பறிமுதல் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உத்தரவாக பிறப்பிப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி,

*போதை தடுப்பு பிரிவு போலீசார் கடத்தலின் போது பறிமுதல் செய்யக்கூடிய வாகனங்களை உடனடியாக அதன்  உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

*விசாரணை நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து வாகனத்தின் பதிவு எண் பதிவு சான்று உள்பட அனைத்து ஆவணங்களையும் புகைப்படங்களாக சமர்ப்பிக்க வேண்டும்.

*வாகனம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் வழக்கு விவரம் வாகனத்தின் முழு விவரங்கள் உரிமையாளர், இன்சூரன்ஸ் உட்பட அனைத்து விவரங்களையும் பட்டியலிட்டு பதிவு செய்ய வேண்டும்.

*விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன்  வாகனம் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது அதன் விவரங்களையும் வாகன நம்பர் வாகனத்தை இஞ்சின் எண்,ஆகியவற்றை புகைப்படம் எடுத்து பராமரிக்க வேண்டும்.

*பறிமுதல் செய்யப்பட்ட கஞ்ச போதை வஸ்துகளை உடனடியாக ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி அதன் சான்று விவரங்களை பாதுகாக்க வேண்டும்.

*ரசாயன பகுப்பாய்வு சான்றுகள் பெற்றவுடன், போதை பொருள் அகற்றல் குழுவிற்கு சான்றுகளையும் முழு விவரங்களையும் அனுப்பி போதை பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் வழக்கு விசாரணையின் போது வாகனத்தின் உரிமையாளர்கள் வாகனத்தை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தால், வழக்கின் தன்மையை பொறுத்து விசாரணை நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கலாம் எனவும், பறிமுதல் செய்து வழக்கு விசாரணை காலம் முழுவதும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை போதை தடுப்பு சட்டப்பிரிவு சொல்வதாக கூறி, பல்வேறு வழிமுறைகளை வகுத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் கடத்தப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல வாகனங்கள் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, உரிமை கோரப்படாத அனைத்து வாகனங்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கிடக்கின்றன. ஆதலால், தமிழகத்தில் அந்தந்த மண்டலத்தில் உள்ள உரிமை கோரப்படாத வாகனங்கள் மற்றும் உரிமையாளர்கள் எடுத்த சென்ற வாகனங்கள் குறித்த முழு விவரங்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சேகரித்து, அதனை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதையும் படிக்க || போலி மருத்துவரின் தவறான சிகிச்சை...மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!