ஊரடங்கு முடிந்ததும் வருகிறேன்.. சகிகலாவின் அடுத்த அதிரடி.! 

ஊரடங்கு முடிந்ததும் வருகிறேன்.. சகிகலாவின் அடுத்த அதிரடி.! 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி எதிர்க்கட்சியானதும் ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சியலைகளை கொடுத்து வருகிறார். 

அவரோடு பேசியவர்களை கட்சியிலிருந்து அதிமுக நீக்கினாலும் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த புவனேந்திரன், விருதுநகரைச் சேர்ந்த குரு ராமச்சந்திரன், திருப்பூரைச் சேர்ந்த சமரசன், ராமநாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஈரோட்டைச் சேர்ந்த கோபால், மற்றும் பண்ருட்டியைச் சேர்ந்த உத்திரவேல் ஆகியோருடன் நேற்று தொலைபேசியில் பேசினார். 

அந்த ஆடியோவில் "விரைவில் நான் வந்துவிடுவேன். கட்சியை அழிக்க யாரையும் விடமாட்டேன். தொண்டர்கள் துணையுடன் கட்சியை மீட்பேன். தொண்டர்களை இனி கவலைபட விடமாட்டேன். ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடம் செல்வேன்.  அதன்பின், அங்கிருந்து தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணம் செல்கிறேன். தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. முதலில் கட்சியை சரி செய்ய வேண்டும். கட்சியை நல்லபடியாக வழிநடத்தி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.