தாய் தந்தையரை கவனிக்க தவறிய மகன்... கம்பி எண்ண வைத்த கோட்டாட்சியர்!!

தாய் தந்தையரை கவனிக்க தவறிய மகன்... கம்பி எண்ண வைத்த கோட்டாட்சியர்!!

வயதான தையை கவனித்துக்கொள்ளாமல் நிர்கதியாய் விட்ட மகனுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளார் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் பகுதியைச் சேர்ந்தவர் மாலையம்மாள். இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகனான முத்துக்குமார் என்பவர் சமீபகாலமாக தாய் தந்தையை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. 

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதியன்று கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற மாலையம்மாள், மகன் மீது புகார் அளித்திருந்தார். இதையடுத்து கோட்டாட்சியர் தனப்பிரியா முத்துக்குமாரை அழைத்து மாதாமாதம் தாய்க்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். 

ஆனால் முத்துக்குமாரோ உத்தரவை காற்றில் பறக்க விட்டு தாயை கவனிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார் மாலையம்மாள். இந்த நிலையில் கடந்த ஜூலை 31-ம் தேதியன்று அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், தாயை கவனிக்காத முத்துக்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து முத்துக்குமாரை கைது செய்த ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பெற்ற தாய் - தந்தையை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வதற்கு தயங்குவோர்க்கு இனிமேல் சட்டம் தயவு தாட்சணியம் இல்லாமல் பாயும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || அரசு பள்ளியின் அஜாக்கிரதையால் பதிப்படைந்துள்ள மாணவி... கை கொடுக்குமா அரசு?