அலுவலகம் பூட்டியிருந்ததால் காத்திருந்து சோதனை... வருமான வரித் துறையினர் காலை முதல் அதிரடி!

சென்னையில் ரசாயண நிறுவனத்திற்கு சொந்தமான இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரசாயண மற்றும் மருந்து நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரையடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சயல் மேன்ஷன் வளாகத்தின் ஐந்தாவது மாடியில் இயங்கி வரும் kawman Exact என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின்  அலுவலகத்தில் பத்துக்கும் அதிகமான  அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கவர்லால் அண்ட் கோ என்ற நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

சௌகார்பேட்டையில் உள்ள அலங்கார் காம்ப்ளக்ஸ், மாதவரம் ஆதிஷ்வர் எக்ஸிபியண்ட்ஸ் நிறுவன கிடங்கு, பூங்கா நகர் பகுதியில் ரபி மனிஷ் குளோபல் இங்க்ரீடியண்ட்ஸ் நிறுவனம்,  வேப்பேரியில் கேவி எண்டர்பிரைசஸ் பிரைவேட் நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, எழும்பூர் ராஜா அண்ணாமலை கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஸ்கோப் இன்கிரீடியன்ட்ஸ் மருந்து நிறுவனம் பூட்டியுள்ளதால் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் காத்துக் கொண்டுள்ளனர்.