கீழடி அகழாய்வு முதன் முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் கண்டெடுப்பு!

கீழடி அகழாய்வு முதன் முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் கண்டெடுப்பு!

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8 ஆம் கட்ட அகழாய்வு பணிகளில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் முதல் முறையாக நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதுமக்கள் தாழி

கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தற்போது 8 ஆம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் முழுமையாக சேதமடையாமல் ஒரு சில தாழிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் முழுமையான தாழி திறக்கப்பட்டு அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பட்டது. இன்று இரவு 2வது முழுமையான தாழி திறக்கப்பட்டது. தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் (பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார், காவ்யா உள்ளிட்ட குழுவினர் நான்கரை அடி உயரமுள்ள தாழியை திறந்து அதில் உள்ள பொருட்களை ஆய்விற்காக வெளியில் எடுத்தனர். தாழியினுள் சிதிலமடைந்த மண்டை ஓடும், கை கால் எலும்புகளும் கிடைத்துள்ளன.

தாழியில் நெல் மணிகள்

கொந்தகை தளத்தில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 8ம் கட்ட அகழாய்வில் மட்டும் 57 தாழிகள் கண்டறியப்பட்ட நிலையில் அதில் 18 தாழிகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு 8 மணிக்கு 123 வது தாழி திறக்கப்பட்டது. இதுவரை தாழிகளினுள் மண்டை ஓடு, சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் உள்ளிட்டவைகள் மட்டும் கண்டறியப்பட்டன. முதன் முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் மணிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இறுகிப் போன நிலையில் கிடைத்துள்ள இந்த நெல்மணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதே போல முதன் முறையாக தாழிகளினுள் சுடுமண் பாத்திரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொல்லியல் துறையினர் தெரிவிக்கையில் தாழிகள் 2600 ஆண்டுகளுக்கு முன் ஒரு அந்தஸ்தாகவே கருதப்பட்டிருக்க வேண்டும், தாழிகளினுள் உள்ள பொருட்களை வைத்து இறந்தவர்களின் மதிப்பையும் அறிய முடிகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தாழியினுள் 6 சுடுமண் பாத்திரங்கள் உட்பட 19 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகளவு பாத்திரங்கள் இருப்பதாலும் நெல் மணிகள் இருப்பதாலும் இவர் செல்வந்தராகவோ மதிப்புமிக்கவராகவோ இருந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.

 மேலும் முகத்தில் கீழ்தாடை பற்கள் கிடைத்துள்ளன மொத்தம் 16 பற்கள் உள்ளன. பற்கள் அனைத்தும் வலுவானதாக இருந்திருக்கும், தாழியினுள் புதைக்கப்பட்டவர்கள் நல்ல திடகாத்திரமான வலுவான உடலமைப்பை கொண்டவராக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இம்மாதத்துட பணிகள் நிறைவு பெற உள்ளதையடுத்து தாழிகள் அனைத்தையும் திறந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறை திட்டமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.