கடலில் மூழ்குவோரை தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடக்கம்.!!

கடலில் மூழ்குவோரை தடுக்கும் விதமாக, சென்னை மெரினா கடற்கரையில் உயிர்காப்பு பிரிவை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

கடலில் மூழ்குவோரை தடுக்க  உயிர்காப்பு பிரிவு தொடக்கம்.!!

சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடலில் குளிக்க செல்லும்போது, தவறி அலையில் இழுத்து செல்லப்படுகின்றனர். இது போன்ற உயிரிழப்பை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதால், தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில்  உயிர்காப்பு பிரிவு என்கிற மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்துள்ளனர்.

இதில் தீயணைப்புத் துறையினர், கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் குழுக்களாக இணைந்து செயல்படவுள்ளனர்.  

உயிர்காப்பு பிரிவினை  தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த, டிஜிபி சைலேந்திரபாபு, மெரினா, அடையாறு, ராயபுரம் ஆகிய கடற்கரைகளில் ஆண்டுதோறும் சுமார் 100 பேர் உயிரிழப்பதாக தெரிவித்தார்.

இதனை தடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உயிர்காக்கும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதற்கட்டமாக  ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் இக்குழு செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கென கடற்கரை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.  பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடலில் இறங்குவதை தடுக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தரமாக மீட்புக்குழு அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும் கூறினார்.