பள்ளி எப்போது கட்டப்படும்?எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

பல மாதங்களாக இ-சேவை மைய கட்டிடத்தில் படித்து வரும் அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள்.

பள்ளி எப்போது கட்டப்படும்?எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள T.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காடனேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப பள்ளி கட்டிடங்கள் மிகவும்  சிதிலமடைந்து காணப்பட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டது.

இ-சேவை மையத்தில் மாணவர்கள்

இதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பள்ளி கட்டிடம் கட்டப்படவில்லை, அப்பள்ளியில் பயிலும் சுமார் 150 மாணவ மாணவிகள் தற்காலிகமாக அப்பகுதியில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை

அடிப்படை வசதிகளான வகுப்பறை, குடிதண்ணீர், கழிப்பறை வசதி என எதுவுமே இல்லாததால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் சுமார் 150 மாணவர் மாணவியர்கள் இ-சேவை மைய கட்டிடத்தில் உள்ள ஒரே அறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் படிக்கும் சூழல் நிலவுவதால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது.

மக்கள் கோரிக்கை

மேலும் ஏற்கனவே இடிக்கப்பட்ட பள்ளி கட்டிட பகுதிகளில் கிராம மக்கள் தங்களது மாடுகளை கட்டி வைக்கும் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளியில் படிப்பதற்கு அடிப்படை வசதிகளான வகுப்பறை, குடிதண்ணீர், கழிப்பறை வசதி என எதுவுமே இல்லாமல் இயங்கி வரும் காடனேரி அரசு ஆரம்பப்பள்ளியின் அருகே திருமண மண்டபம் செயல்படுகிறது. இதன் காரணமாக விசேஷ நாட்களில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கச் செய்வதால் குழந்தைகள் மேலும் படிக்க முடியாத சிரமம் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஒன்றிணைந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.