அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது; ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம்

அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது; ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

சமீப காலங்களில், தமிழகத்தில் அவ்வப்போது மின் தடை ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. ஆரம்பத்தில் இது பெரிதாக பாதிக்கவில்லை என்றாலும், கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து மின் தடை ஏற்படுவது மக்களுக்கு பெரிதளவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. வெயிலின் தாக்கம் ஒருபுறம் என்றால், மின் தடை மற்றொரு பக்கம் என இரு பக்கமும் மக்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

இதுகுறித்து, எதிர் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 

"தமிழ்நாட்டில் சட்டம் ஒழங்கு சீர்குலைவு, பாலியல் துன்புறுத்தல், கள்ளச்சாராய கலாச்சாரம், போதைப்பொருட்கள் நடமாட்டம், விலைவாசி உயர்வு என பல பிரச்சினைகளால் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மின்வவெட்டு வாட்டி வதைக்கிறது" எனவும், "தற்போதுள்ள நிலைமையை பார்க்கும் போது எதையும் சமாளிக்க முடியாமல் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது" எனவும், அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

தற்போதுள்ள நிலைமை நீடிக்காமல், மக்கள் நலனில் அக்கறை காண்பித்து, அவ்வப்போது  ஏற்படும் மின் வெட்டிற்கு, அரசு நடவடிக்கை எடுத்தால், இனி வரும் நாட்கள் மக்கள் அவதிக்குள்ளாவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.