கடைகளுக்கு சீல் வைக்க முயன்ற காவல் துறை... பொதுமக்கள் சாலை மறியல்!!

கடைகளுக்கு சீல் வைக்க முயன்ற காவல் துறை... பொதுமக்கள் சாலை மறியல்!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடைகளுக்கு சீல் வைக்க முயன்ற போலீசாரைக் கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையிலிருந்து 100 மீட்டர் தொலைவில், நாசர் (63) என்பவர் மளிகை கடையும், அதனை அடுத்து கிருஷ்ணமூர்த்தி ( 65 ) என்பவர் பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த 40 வருடங்களாக இதே இடத்தில் கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  புதுப்பட்டினம் போலீசார் இரண்டு கடைகளுக்கும் வந்து தண்ணீர் பாட்டில் மற்றும் தண்ணீர் அருந்தும் பிளாஸ்டிர் கப் டம்ளர் விற்பனை செய்வதாக கூறி இருவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில் போலீசார், கிராம நிர்வாக அலுவலர்  பவளச்சந்திரன் மற்றும் வருவாய் துறை ஊழியர்களுடன் வந்து இரண்டு கடைகளையும் சீல் வைக்கப் போவதாகவும் தெரிவுத்தனர். இதனை அறிந்த புதுப்பட்டினம் வியாபாரிகள், மாலை அனைத்து கடைகளையும் அடைத்து  சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் முன்னாள் வியாபாரிகள் சங்கத் தலைவர் குபேந்திரன் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட 300 பேர் திரண்டு வந்து பழையாறு துறைமுகத்திலிருந்து புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் கொள்ளிடம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுப்பட்டினம் போலீசார் இரண்டு கடைகளுக்கும் சீல் வைக்கும் முடிவை கைவிடுதாகவும், இரு கடை வியாபாரிகள் மீது பதியப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்வதாகவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த  போராட்டத்தால் புதுப்பட்டினத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: உதகை வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!