கரும்புகையை வெளியேற்றும் தொழிற்சாலை; பொதுமக்கள் போராட்டம்!

கரும்புகையை வெளியேற்றும் தொழிற்சாலை; பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூரில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரும்பு உருக்கும் ஆலையை அகற்ற கோரி ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அனுப்பட்டி கிராமத்தில் கண்ணப்பன் இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிலிருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிப்படைவதாக கூறி கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அந்நிறுவனம் இயங்க தடை விதிக்கப்பட்டது. 

இதனிடையே அங்கு உள்ள இரும்பு உருக்கு ஆலை கட்டிடத்தை அப்புறப்படுத்த கோரி அப்பகுதி சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலையில் தொடங்கிய போராட்டமானது இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. இதனிடையே இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்படாததால் அங்குத் திரண்டு இருந்த அனுப்பட்டி கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி கடம்பூர் மலைகிராம வாழ் மக்கள் போராட்டம்!