விடுமுறை முடிந்து திரும்பிய மக்கள்... ஸ்தம்பித்த சென்னை!

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற சென்னைவாசிகள் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு மற்றும் ஓங்கூர் சுங்கச்சாவடி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை  கட்டுப்படுத்தும் வகையில் மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு முறையும் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து பணிபுரியும் மக்கள் தென்தமிழகம் நோக்கி சொந்த ஊர்களுக்கு சென்று வருவது  வழக்கம். இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்துள்ளதால் சென்னை திரும்பும் பொதுமக்களால் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் தென்மாவட்டங்களுக்கு சென்றவர்கள் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து புதன்கிழமை அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல வேண்டி உள்ளதால் ஏராளமானோர் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் சிங்கபெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.

இதேபோல் சென்னையை நோக்கி சாரை சாரையாக கார், பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் வந்து கொண்டிருப்பதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.