நீதிமன்றங்களை எதிர்த்துப் போராட்டம்…மார்க்சிஸ்ட் கட்சி அதிரடி!

நீதிமன்றங்களை எதிர்த்துப் போராட்டம்…மார்க்சிஸ்ட் கட்சி அதிரடி!

நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி உள்ளவர்களை வெளியேற்றி அந்த வீடுகளை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த விஷயத்தில் நீதிமன்றம் நியாயமாக நடந்து கொள்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார் ..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவுகளை விளக்கி சிறப்பு பேரவை கூட்டம் இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கிருஷ்ணகிரிக்கு வருகை புரிந்தார்.

நீதிமன்றமே நீர்நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளது

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி உள்ளவர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும், அந்த வீடுகளை இடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளது. இவற்றை இடிக்க யார் உத்தரவு போடுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்கிறதா என கேள்வி எழுப்பிய பாலகிருஷ்ணன், இது போன்ற போக்கினை வன்மையாக கண்டிப்பதாக கூறினர். இதே நிலை நீடித்தால் நீதிமன்றங்களை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.

மின்சார திருத்தச் சட்டத்தால் பாதிப்பு

நாடாளுமன்றத்தின் நிலை குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்சார சட்டம் 2022 நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்திய ராமகிருஷ்ணன், இந்த சட்டம் இயற்றப்பட்டால் மின்சாரத்துறை தனியாரிடம் சென்று விடும், மேலும் தமிழ்நாட்டிலுள்ள 22 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் பாதிக்கப்படும், ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது ரத்தாகும். மேலும் தனியார் சொல்லும் மின் கட்டணம் செலுத்தியாக வேண்டிய சூழ்நிலை உருவாகும், இதனால் சிறு,குறு தொழில்கள்  பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த மின்சார சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு இயக்கத்தை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதற்கான முன்மொழிவுகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.இந்தக் கூட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு மற்றும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.