மாற்றுச் சான்றிதழ் பெற மாணவியிடம் ரூ.1,15,000 கேட்கும் தனியார் பள்ளி!

மாற்றுச் சான்றிதழ் பெற மாணவியிடம் ரூ.1,15,000 கேட்கும் தனியார் பள்ளி!

12 ஆம் வகுப்பு படித்த மாணவி மாற்று சான்றிதழ் பெற பணம் கேட்கும் தனியார் பள்ளியின் செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மாற்றுச் சான்றிதழ்

கோவை வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவி ஒருவர் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு 12 ஆ   ம் வகுப்பு பயின்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பள்ளிக் கட்டணத்தை மாணவ, மாணவிகள் கட்ட வேண்டியதில்லை என்று அரசு அறிவித்திருந்தது.

சான்றிதழ் பெற ரூபாய் 1,15,318 கேட்கும் பள்ளி

இந்நிலையில் அந்த தனியார் பள்ளி மாணவிக்கு ரூ.1,15,318 கட்டணம் செலுத்தினால் தான் மாற்று சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறியுள்ளது. மாணவியின் பெற்றோருக்கு கொரோனா காலத்திலிருந்து தற்போது வரை வேலை கிடைக்காததாலும் ஊதியம் இல்லாததாலும் மாணவி கல்விக் கட்டணம் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் சிறிது சிறிதாக தவனை முறையில் கட்டணம் கட்டச்சொல்லி மாணவியிடம் கடிதம் எழுதி வாங்கிய பள்ளி நிர்வாகம் தொடர்ந்து மாணவியின் மாற்று சான்றிதழை தர மறுப்பதோடு கட்டணம் கட்ட சொல்லி தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது.

இந்நிலையில் மாணவி தனியார் கல்லூரியில் இளங்களை பாடப்பிரிவில் சேர்ந்த நிலையில் மாற்று சான்றிதழ் இல்லாததால் மாணவி கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

பாமக மாவட்ட ஆட்சியரிடம் மனு

மாணவியின் இந்த அவல நிலையை அறிந்த கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மாணவிக்கு நீதி கேட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு அளித்தனர்.

இது தொடர்பாக பாமகவினர் கூறும் போது தனியார் கல்லூரியின் இந்த கட்டண கொள்ளையினால் ஒரு படிக்கும் மாணவியின் கல்வி கனவு தகர்ந்துள்ளதாகவும் எனவே மாணவியின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாணவியின் மாற்று சான்றிதழை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.