தலைமை ஆசிரியர்களை பதவியிறக்கம் செய்யாதீர்... ராமதாஸ் அறிக்கை!!

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 1,300   முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருக்கிறார்கள் என்ற ஒரே அளவீட்டின் அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "உயர்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத சூழலில், பதவி இறக்கம் செய்யப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை எங்கு பணியமர்த்துவது? என்ற சிக்கலும் ஏற்படும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமித்தால், பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும்; அவர்களால் தலைமை ஆசிரியர்களாக முடியாது என்பது தான் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள காரணம் ஆகும். இதை மனதில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் 600-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்போது பதவி இறக்கம் செய்யப்பட உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், அந்த இடங்களுக்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய பட்டியலை தயாரித்து கலந்தாய்வு மூலம் காலியிடங்களை நிரப்ப இயலும். சில இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறும்  வாய்ப்போ அல்லது வேறு பதவி உயர்வு பெறும் வாய்ப்போ இருந்தால் அங்கு கூடுதலாக ஒரு தலைமை ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி, அந்த இடத்தில் தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்களை அமர்த்தலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பிரதிநிதிகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் அழைத்துப் பேசி இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் சிக்கலுக்கு  தீர்வு காண வேண்டும் எனவும் அதன் மூலம் பள்ளிக்கல்வியில் குழப்பங்கள் ஏற்படாமல் அரசு தடுக்க வேண்டும் எனவும் தெரிபித்துள்ளார்.

இதையும் படிக்க || லட்சுமி ராமகிருஷ்ணணுக்கு, அன்னபூரணி அரசு எச்சரிக்கை... நடந்தது என்ன?