"எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் எதிரொலி தான் அமலாக்கத்துறை சோதனை" முதலமைச்சர் ஸ்டாலின்!!

"எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் எதிரொலி தான் அமலாக்கத்துறை சோதனை" முதலமைச்சர் ஸ்டாலின்!!

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தின் எதிரொலியாகவே அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்களின் இரண்டாவது கூட்டம், பெங்களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று பெங்களூர் செல்கிறார்.

இதைத்தொடர்ந்து, பெங்களூரு செல்வதற்காக முதலமைச்சர் சென்னை விமான நிலையம் வந்திருந்த பொழுது, செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். நடக்கவிருக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தை குறித்து பேசுகையில், "பாட்னாவில் எதிர் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஒரு சில முடிவுகளை எடுத்தோம். அதை தொடர்ந்து  இன்று மற்றும் நாளை  என இரண்டு நாட்கள், பெங்களூரில், எதிர் கட்சி தலைவர்களின் 2 வது கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்த கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். தொடர்ந்து இந்த எதிர்க்கட்சி கூட்டம் நடத்தப்படுவது, பிஜேபி கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான், இன்று அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகின்றது. ஏற்கனவே வடமாநிங்களில் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும் செய்து வருகின்றனர். ஆனால் அதை பற்றியெல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் சற்றும் கவலைப்படவில்லை", என்று பேசியுள்ளார்.  

மேலும், "உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடத்தப்படும் சோதனையானது, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது தொடங்கப்பட்ட பொது வழக்காகும். ஏறக்குறைய 11 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட வழக்கு. அந்த சமயத்தில் அதிமுக தான் தொடர்ந்து பத்தாண்டு காலங்கள் ஆட்சியில் இருந்தது. அப்பொழுதெல்லாம் இதுகுறித்து அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை. முன்னதாக அவர் மீது தொடரப்பட்டிருந்த இரண்டு வழக்குகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அது போலவே, இந்த வழக்கிலிருந்தும் அவர் விரைவில் விடுவிக்கப்படுவார்" என்று கூறியுள்ளார்.

மேலும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில், நிச்சயமாக மக்கள் பதில் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் எனவும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்பும் விதமாக தான், இது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள் எனவும், இதையெல்லாம் சமாளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் முதலைமச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || எதிர்க்கட்சிகள் கூட்டம்: இன்று பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!