ஊழியர் பற்றாகுறையை தீர்க்க சார் பதிவாளர்கள் கோரிக்கை!

நூற்றுக்கும் மேற்பட்ட சார்பதிவு அலுவலர்கள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதான குற்றங்களை உரிய விசாரணை நடத்தி விரைந்து வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்றும் அதில் நிரபராதி என தீர்ப்பு வருபவர்களுக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும் என்றும்   கேட்டுக்கொண்டார்.

ஊழியர் பற்றாகுறையை தீர்க்க சார் பதிவாளர்கள் கோரிக்கை!

பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையை  தீர்க்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சார்பதிவாளர் சங்க மாநில  பொதுக்குழுவில் தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு சார் பதிவாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் ஆறுமுகநவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசாணை எண் 419 ஐ உடனடியாக அமல்படுத்தி பத்திரப்பதிவு அலுவலர்களின் பணி பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும், மோசடி ஆவண பதிவு தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலர்கள் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வழக்குகளை விரைந்து முடிக்க கோரிக்கை

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த அதன் மாநில துணைத் தலைவர் முத்துசாமி,சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட சார்பதிவு அலுவலர்கள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதான குற்றங்களை உரிய விசாரணை நடத்தி விரைந்து வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்றும் அதில் நிரபராதி என தீர்ப்பு வருபவர்களுக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிலர் தான் தவறானவர்கள்

மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைக்கு வரும் போது அவர்களாகவே பணத்தை கொண்டு வருவதாகவும் அலுவலகத்தில் பதிவிற்காக பணத்துடன் வருபவர்களது பணத்தையும் பறிமுதல் செய்து சார்-பதிவாளர்  அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் என தவறாக சித்தரித்து வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் கூறியதுடன் உண்மையில் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றும்  விமர்சித்தார்.