தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா...தலைவர்கள் மரியாதை!

அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா...தலைவர்கள் மரியாதை!

தமிழர் தந்தை என அழைக்கப்படும், தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இதழியல் முன்னோடி

1942ம் ஆண்டில் மதுரை முரசு என்ற இதழைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனார், தமிழன், தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளைத் தொடங்கி தமிழக இதழியல் துறையில் நீங்காத இடம்பெற்றார். சட்டப்பேரவை உறுப்பினராகவும், சபாநாயகராகவும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அவர், தனது 76வது வயதில் இயற்கை எய்தினார்.

தலைவர்கள் மரியாதை

இந்நிலையில் அவரது 118வது பிறந்தநாளான இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், மனோ தங்கராஜ், ரகுபதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு இன்று தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வைகோ புகழாரம்

தொடர்ந்து, சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பத்திரிகை உலகின் ஈடு இணையற்ற புரட்சியாளராக விளங்கியவர் ஆதித்தனார் என தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் பேரணி மூலம் தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற முயற்சிப்பதாகவும் பெரியார், அண்ணா சிலைகள் மீது வேண்டுமென்றே தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு, சமத்துவ மக்கள் கட்சியின் எர்ணாவூர் நாராயணன், விஜிபி குழுமத்தலைவர், விஜிபி சந்தோசம் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.