தொடர் கனமழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு....

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

தொடர் கனமழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு....

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து 30 ஆயிரம் கன அடி உபரி நீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுள்ளதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து  வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியில் இருந்து  தற்போது விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

இதனால்  ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள், நீர்வீழ்ச்சி பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டு வெள்ளக்காடாக மாறியுள்ளன. மேலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், தொடரும் மழையால், நேற்று வரை 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று  65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 120 புள்ளி 10  அடியாகவும், நீர் இருப்பு  93 புள்ளி 63  டி.எம்.சி. ஆக உள்ளது. இதனிடையே அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 65 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.