விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…வணிகம் பாதிப்பு!

விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…வணிகம் பாதிப்பு!

விசைத்தறி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறிகள் வேலைநிறுத்தம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுக்கும் இந்த வேலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு அனைத்து வகை விசைத்தறி கூடங்களுக்கும் 30 சதவிகித மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக தொடரும் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத் தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெறும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள விசைத்தறியாளர்கள், அதுவரை மின் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.