உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய இளைஞர்: வீடியோ வைரல்!  

வீட்டு உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை விசாரிக்கச் சென்ற காவல்துறை அதிகாரியை அந்த நபர் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய இளைஞர்: வீடியோ வைரல்!   

சென்னை நொளம்பூர் 4வது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் தனது வீட்டின் கட்டுமான பணிகளுக்காக வீட்டின் முன் ஜல்லி மற்றும் மணலை கொட்டு வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரின் மகன் டேனி வீட்டின் உரிமையாளரான அரசு அதிகாரியிடம் தான் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவன் எனவும் தனக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டு மிரட்டியதோடு, அதை தட்டிக்கேட்ட காவலாளியை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையான 100-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அங்கு வந்த நொளம்பூர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் டேனி-யிடம் விசாரிக்கச் சென்றபோது காவல் உதவி ஆய்வாளரை டேனி என்ற அந்த நபர், "யார் நீ? எங்கிருந்தோ வந்து எங்கிட்ட பேச வரியா? ஒழுங்கா போய்டு..." என்றவாறு கேட்டு "நான் நொளம்பூர்காரன் தான், முடிஞ்சத பாத்துக்கோ" என்று கூறி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெண் வழக்கறிஞர், ஆட்டோ ஓட்டுநர் என காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோக்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த விடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடியோ பதிவை வைத்து காவல்துறை அதிகாரியை மிரட்டிவிட்டு தப்பிச் சென்ற டேனி-யை நொளம்பூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.