ஞாபக மறதியால் வந்த வினை... இருந்தாலும் இவனுக்கு அதிர்ஷ்ட மச்சம் இருக்குப்பா...!

புகார் அளித்த 15 நிமிடத்தில் வெளியூர் இளைஞர் ஞாபக மறதியால் தவறவிட்டுச் சென்ற முதுகுப்பையை, அனைத்து உடைமைகளுடனும் பத்திரமாக மீட்டுக்கொடுத்த சென்னை காவல்துறையை பாராட்டி இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார்.  

ஞாபக மறதியால் வந்த வினை... இருந்தாலும் இவனுக்கு அதிர்ஷ்ட மச்சம் இருக்குப்பா...!

சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்  சர்வேஸ்வரன். பட்டதாரி இளைஞரான இவர் சொந்தமாக தொழில் நடத்தி வரும் நிலையில், அலுவல் காரணங்களுக்காக நேற்று சென்னை வந்துள்ளார். காரில் சென்னை வந்த அவர் பணிகளை முடித்துவிட்டு நேற்று மதியம் சைதாப்பேட்டை ரயில் நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் உணவருந்தியுள்ளார். பின்னர் உணவருந்திவிட்டு மீண்டும் அங்கிருந்து கார் மூலம் சேலம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதற்கிடையில் தான் கொண்டு வந்த உடமைகள் அடங்கிய முதுகுப்பையை ஞாபக மறதியில் உணவகத்திலேயே விட்டுச் சென்றது சர்வேஸ்வரனுக்கு பயணத்தின்போது நினைவிற்கு வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சர்வேஸ்வரன் இணையத்தில் இருந்த சைதாப்பேட்டை காவல் நிலைய எண்ணை தொடர்புகொண்டு நடந்தவற்றை புகாராக தெரிவித்துள்ளார். புகார் அளித்த 15 நிமிடங்களுக்குள் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று உணவக பணியாளர்களால் எடுத்து வைக்கப்பட்டிருந்த சர்வேஸ்வரனின் முதுகுப்பையை உடனடியாக மீட்டு சர்வேஸ்வரனுக்கும் இதுகுறித்த தகவலை தெரிவித்தனர்.

தனது முதுகுப்பை பத்திரமாக மீட்கப்பட்டதையறிந்த அவர், இன்று அதிகாலை மீண்டும் சென்னை வந்து தனது அடையாள அட்டைகள் முதுகுப்பையில் இருந்த உடைமைகளின் விவரங்களை தெரிவித்தார். அதனடிப்படையில் முதுகுப்பையில் இருந்த 74 ஆயிரத்து 110 ரூபாய் ரொக்கப்பணம், ஆப்பிள் டேப் மற்றும் இதர உடமைகளும் சர்வேஸ்வரனிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பதிவிட்டு சர்வேஸ்வரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது உடமைகள் எதுவும் தொலையாமல் பத்திரமாக மீட்டுக்கொடுத்த காவல்துறைக்கு நன்றி எனவும், இதுவரை மக்களின் கண்ணோட்டங்களின் அடிப்படையில் ஒரு தவறான கண்ணோட்டத்திலேயே சித்தரிக்கப்பட்ட காவல்துறையினர் தற்போது தன் கண்களுக்கு ஒரு சொந்தம் போல் தெரிகிறார்கள் என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.