தொழிற்சாலை இரசாயன கழிவால்  விவசாய நிலங்களுக்கு பாதிப்பா?

தொழிற்சாலை இரசாயன கழிவால்  விவசாய நிலங்களுக்கு பாதிப்பா?

குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயன கழிவு நீரால் விவசாய விளை நிலங்கள் வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரசாயன கழிவு நீர்

ஓசூர் கெலமங்கலம் சாலையில் உள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயன கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல்  அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் கலக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் குந்துமாரணப்பள்ளி, பைரமங்கலம் கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான விளைநிலங்கள் பாழாகி வருகிறது.

இரசாயன கழிவு நீர் விளை நிலங்களில் கருப்பு நிறத்தில் கலப்பதால் விளை நிலங்களில் எந்த பயிர்களையும் விளைவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளனர். அனைத்து கிணறுகளிலும், தண்ணீர் குட்டைகளிலும்  இரசாயன கழிவு நீர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

கால்நடைகளுக்கு பாதிப்பு

இது தவிர இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இந்த இரசாயன கழிவு நீரை அவ்வப்போது குடித்து பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. ஏராளமான கால்நடைகள் இரசாயன கழிவு நீரை குடித்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இரசாயன கழிவுகள் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு எமனாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள், பொதுமக்கள் அப்பகுதி உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே கழிவு நீரை விவசாய நிலங்களில் கலக்கும் தொழிற்சாலையில் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விளை நிலங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.