நாங்களே பாதை அமைக்கிறோம்...ஒரு குடும்பத்தின் அதிரடி அறிவிப்பு!  

நாங்களே பாதை அமைக்கிறோம்...ஒரு குடும்பத்தின் அதிரடி அறிவிப்பு!  

வீட்டிற்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டி நீண்ட நாட்களாகப் போராடியும் பாதை அமைக்கப்படாததால் கால்வாயை தூர்த்து பாதை அமைக்கப்போவதாக ஒரு குடும்பத்தினர் அறிவித்துள்ளனர் .

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த சேந்தன்குடி கிராமத்தில் செல்வம் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது வீடு அம்புலி ஆற்றின் அன்னதானக் காவேரி கால்வாயின் தென்புறமாக அமைந்துள்ளது. ஆனால் அவரது வீட்டிற்கு செல்லும் சாலையானது கால்வாயின் வலப்புறமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக செல்வம் குடும்பத்தினர் வலப்புறத்திற்கும் தென்புறத்திற்கும் இடையே தற்காலிக மரப்பாலம் அமைத்து பயன்படுத்தி வந்தனர் . இந்நிலையில் கடந்த ஆண்டு கால்வாயில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து செல்வம் குடும்பத்தினர் கால்வாயின் தென்புறத்தையும் சாலையையும் இணைக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சாலை அமைத்துத் தருமாறு பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆனால், நான்கு மாத காலமாகியும் பாதை அமைக்க  அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , விரக்தியடைந்த செல்வம், அன்னதானக் காவேரி கால்வாயைத் தூர்த்து தனது வீட்டிற்கு பாதை அமைக்கப் போவதாக அவரது வீட்டின் முன்புறம் பதாகையை வைத்துள்ளார்.