ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமனம்...! சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்...!!

ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமனம்...! சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்...!!

அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை மீறி ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில்  உள்ள தொழிலாளர் ஆணையரகம் முன்பு  அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியதை கண்டித்தும், தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை மீறி ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கனகராஜ், "தற்பொழுது ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது இது பொது மக்களுக்கும் போக்குவரத்து கழகத்திற்கும் எந்த வகையிலும் பலன் அளிக்காது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியுள்ளனர். இதனை உடனே திரும்ப பெற வேண்டும். அத்தோடு தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை மீறி ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார். 

தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ஏற்கனவே வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்ததை குறிப்பிட்ட அவர், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இதே டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையரகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாகவும் அதே வேளையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியமர்த்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது மட்டுமின்றி மே 5 ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாக கூறியிருந்த நிலையில் இன்று நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வருவதற்கு தயாராக இல்லை என குற்றம் சாட்டியுள்ள அவர் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தொடர்ந்து பணியில் அமர்த்தவே இதுபோன்று காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க:தனித்துவத்தை இழக்கிறதா சென்னை மாநகராட்சி...??