நவீன கால நாட்டாமைகள்...! நடவடிக்கை எடுக்குமா அரசு...? 

நவீன கால நாட்டாமைகள்...! நடவடிக்கை எடுக்குமா அரசு...? 

"இந்த குடும்பத்தோட யாரும் அன்னந்தண்ணி பொழங்ககூடாது" என நாட்டாமை படத்தில்  நடிகர் விஜயகுமார் பேசும் சினிமா நாம் அனைவரும் அறிந்ததே.இந்த காலத்திலும் இப்படி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் சில கிராமங்களில் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  அப்படி ஒரு குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர் நவீன கால நாட்டாமைகள். ஆனால் இவர்கள் ஒன்றும் , நீதிக்காவும், நேர்மைக்காகவும்,  நியாயத்திற்காகவும் இதை செய்தவர்கள் இல்லை. இது முழுக்க முழுக்க கட்டப்பஞ்சாயத்தின் கொடூர முகம்.

கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி அருகே உள்ள மாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது குடும்பத்தை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுங்களுக்கு முன்பு நிலப்பிரச்னை காரணமாக கட்டப் பாஞ்சாயத்து கூடியதற்கு கிருஷ்ணன் ஒத்துழைப்பு தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சில ஊர் தலைவர்கள் கிருஷ்ணன் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக மீண்டும் கட்டபஞ்சாயத்து கூடிய நிலையில் கிருஷ்ணனுக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள்  விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல்  5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்களிடம் அன்னந்தண்ணி புழங்க கூடாது என்றும், பால் உள்ளிட்ட எந்த மளிகை பொருள்களும் தரக்கூடாது என்றும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் இதனை எதிர்த்தாலும், அல்லது இதற்கு ஒத்துழைப்பு தர மறுத்தாலும் அவர்களுக்கும் இதே நிலை தான் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை விட கொடுமையின் உச்சகட்டமாக  சூளகிரியில் உள்ள மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று வரும் கிருஷ்ணனின் மகள் காஞ்சனாவை காணும்  இடமெல்லாம் திட்டி தீர்ப்பதுடன், ஆபாசமாக பேசியும் வருவதை வாடிக்கையாக கொண்டு வருவதாக குமுறுகின்றனர் இந்த ஏழை குடும்பத்தினர்.

இதுகுறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் மவுனம் காப்பதாக குமுறும் இவர்கள் கட்டப்பாஞ்சாயத்து செய்து தங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.