தர்மபுரியில் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்..!

தர்மபுரியில் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்..!

தருமபுரி மாவட்டம் நாகர்கூடல் பகுதியில் காலை மாலையில் பள்ளி கல்லூரி பொதுமக்கள் நலனுக்காக  சரியான நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என காலை நேரத்தில் வந்த பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகர்கூடல் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு நாகர்கூடல், கழனிகாட்டூர், மத்தாளபள்ளம், பேபின மருதஅல்லி மற்றும் அதனை ஒட்டி உள்ள கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அதிகளவில் விவசாயம் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.

மேலும் நாகர்கூடல் பகுதியில் இருந்து நல்லம்பள்ளி, தருமபுரி நகரப் பகுதி மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏராளமானோர் பணிக்கு செல்கின்றனர். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கும் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்லம்பள்ளி அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி பகுதியை நாடி செல்ல வேண்டி உள்ளது. இதற்காக அதிக அளவில் மக்கள் பேருந்து  போக்குவரத்தையே  பயன்படுத்தி வருகின்றனர். 

பலமுறை கோரிக்கை வைத்தும் இப்பகுதிகளில் சரியான நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாததால், அவதியடைந்துள்ள பொதுமக்கள், இன்று நாகர்கூடல் வழியாக செல்லும் வழி தடம் எண் 10A அதனை தொடர்ந்து 2A  எண் கொண்ட அரசு பேருந்தை கிராம மக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அரசு  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது. தங்கள்  கிராமப் பகுதிக்கு  காலை மற்றும் மாலை வேலைகளில் சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும்,  குறிப்பாக காலையில் 7:00 மணி மற்றும் இரவு 8 மணிக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும், பணிக்கு செல்வோர் மற்றும் தற்போது தேர்வு எழுதி வரும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை நேரத்தில் எட்டு மணி அளவிற்கோ அல்லது மாலையில் 5 மணி அளவிற்கோ  எந்த ஒரு அரசு பேருந்துகளும்  இயக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். 

இதையும் படிக்க | கொத்தடிமை போல் நடத்தும் நகராட்சி நிர்வாகம்...! துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல்...!!

 இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் தங்கள்  கிராமப் பகுதிக்கு எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பிரச்சனை தீர்க்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு நாங்கள் செல்வோம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த நாகர்கூடல் ஊராட்சி மன்ற தலைவர் குமார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி கல்லூரி மற்றும் மாணவர்கள் செல்வதால் பேருந்துகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் நம் கோரிக்கையை நேரடியாக முதல்வரிடம் கொண்டு செல்லலாம் என சமாதானப்படுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க | தஞ்சை பெரியகோவிலில் கோலாகலமாக தொடங்கிய சித்திரை திருவிழா...!