கனவுகளை சுமந்து...நிலவை நோக்கி பறக்க...சந்திரயான் 3 ரெடி!

கனவுகளை சுமந்து...நிலவை நோக்கி பறக்க...சந்திரயான் 3 ரெடி!

பல கோடி இந்தியர்களின் கனவைச் சுமந்து, நிலவை நோக்கி பறக்க தயாராக இருக்கும் சந்திரயான் மூன்று விண்கலம் ஜூலை 14 பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. 

நிலவின் நிலப்பரப்பில் நீர் மூலக்கூறுகள் உள்ளதை, 2008-ம் ஆண்டே உலகுக்கு தெரியப்படுத்தியது இஸ்ரோவின் சந்திரயான் ஒன்று விண்கலம். 

2019-ம் ஆண்டு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், பின்னர் தென் துருவத்தை அடைந்ததும், நிலவின் கரடு முரடான மேற்பரப்பின் மீது மோதி சேதமடைந்ததால் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் பெற்ற தரவுகளையும், தகவல்களையும் படிப்பினையாகக் கொண்டு, தொழில்நுட்ப ரீதியிலாக பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான் 3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ஜூலை 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணை நோக்கி பாய்கிறது. 

எல்.வி.எம்.3 ரக ராக்கெட் மூலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான் 3 விண்கலம், சுமார் 43 புள்ளி 5 மீட்டர் உயரமும் 642 டன் எடையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரையோஜெனிக்ஸ் தொழில்நுட்பமான திட மற்றும் திரவ எரிபொருள்கள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் 3 ஆயிரத்து 865 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்கள் கொண்டுசெல்லப்பட உள்ளன. 

இதையும் படிக்க : அடுத்த 2 நாட்களுக்கு...சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு...!

RAMBHA LP, CHASTE, ILSA, APXS, LIBS, SHAPE உள்ளிட்ட ஆறு செயற்கை கோள்கள் நிலவின் மேற்பரப்பு, கனிமவியல் கூறுகள், நீர் மூலக்கூறுகள், நிலவின் தோற்றம் குறித்த பல்வேறு தகவல்களையும் ஆய்வு செய்து தரவுகளாக அளிக்க உள்ளன.

சந்திரயான் 3 விண்கலத்தின் பயணத்தை பொறுத்தவரை, பூமியின் நிலப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் நீள்வட்ட பாதைக்கு பயணப்பட வேண்டும். பின்னர், பூமியைச் சுற்றி நீள் வட்ட பாதையில் 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வரை சுற்றி, பின்னர் சுற்றுப்பாதை உயர்த்துதல் மூலம் பயணித்து, பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து நிலாவின் ஈர்ப்பு சக்தி விசைக்குள் நுழைய வேண்டும்.

நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செல்வதற்கு ஏதுவாக சில பயண மாற்றங்கள் செய்த பின்னர் பூமிக்கும் நிலாவுக்கும் இடையே இருக்கும் சம ஈர்ப்பு விசை புள்ளியில் இருந்து, நிலாவின் ஈர்ப்பு விசைக்கு விண்கலம் மாற்றப்படும்.

அதனைத் தொடர்ந்து, நிலாவை சுற்றி நீள் வட்ட பாதையில் சுற்றி நிலவின் பரப்பில் தரையிறங்கும். பின்னர் களம் எனப்படும் லேண்டர் குறைந்தபட்சம் 30 கிலோமீட்டரிலிருந்து, அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வரை நிலை நிறுத்தப்படும். இறுதியாக, நிலவின் மேற்பரப்பில் ரோவர் தரையிறக்கப்பட்ட பின்னர், நிலவின் மேற்பரப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரவுகள் அளிக்கப்படும்.

இந்த ரோவரை இறக்கும் பணியின் போதுதான்  சந்திரயான் 2  நிலப்பரப்பில் மோதி தோல்வியடைந்தது. இதைக் கருத்தில் கொண்டு இந்த முறை அசம்பாவிதங்களைத் தவிர்க்க பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சந்திராயன் 2 திட்டத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு நீள் வட்ட பாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டர், சந்திரயான் மூன்றிற்கு கூடுதல் செயற்கைக் கோளாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நிலவில் நடக்கும் நிகழ்வுகளை சோதித்து, சந்திரயான் மூன்றை வெற்றி பெற செய்து, நிலாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் திகழ உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று இந்தியர்களின் கனவுகளை சந்திரயான் 3 சுமந்து செல்லும் நிலையில், கனவு மெய்ப்படுவதைப் பார்ப்பதற்கு அடுத்த நாற்பது நாட்கள் காத்திருக்கதான் வேண்டும்...