2015இல் யாரை விமர்சித்து நீட்கப்பட்டாரோ...இன்று அவர்களுடன் இணைப்பு...கோவை செல்வராஜ் அதிரடி!

2015இல் யாரை விமர்சித்து நீட்கப்பட்டாரோ...இன்று அவர்களுடன் இணைப்பு...கோவை செல்வராஜ் அதிரடி!

அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகி தற்போது, திமுகவில் இணைந்துள்ளார்.

1991- 1996: தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த கோவை செல்வராஜ் கடந்த 1991 முதல் 1996 வரையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெயலலிதா ஆதரவாளராக மாறி, காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏவாக சட்டமன்றத்தில் செயல்பட்டார்.

2006: இதனைத்தொடர்ந்து, கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் சேவாதள அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இதனால் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, இவர் தலைமையில் இருப்பது ‘கருணாநிதி காங்கிரஸ்’ என்று கடுமையாக விமர்சித்தார்.

2015: அப்போது தமிழகத்தில் திமுகவும்-காங்கிரசும் கூட்டணியில் இருந்தது. கூட்டணி கட்சியை விமர்சித்து பேசியதாலும், அதிமுகவுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும், அடுத்த(2016) சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணிக்குத் தயாராக வேண்டும் என அதிர வைத்ததாலும், 
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸில் இருந்து கோவை செல்வராஜ் நீக்கப்பட்டார்.  

இதையும் படிக்க: பாஜகவை ஓரம் கட்டிய ஆம் ஆத்மி...15 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து சாதனை!

அதிமுகவில் இணைந்த செல்வராஜ்:

காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட செல்வராஜ், அடுத்ததாக ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை செய்தி தொடர்பாளராக இணைத்துக் கொண்டார். அவரது மறைவிற்கு பிறகும் அதிமுகவிலேயே தொடர்ந்து வந்த கோவை செல்வராஜ், அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் அவருக்கு ஆதரவாளராக மாறி செயல்பட்டு வந்தார். 

ஓபிஎஸ்க்கு ஆதரவாளராக செயல்பட்டு வந்த செல்வராஜ், தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்:

இந்நிலையில், இன்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான்கு அரை ஆண்டு காலமாக அதிமுகவுக்கு வக்காலத்து  பேசியதற்கு நான் மக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் பயணிப்பேன். விரைவில் ஐந்தாயிரம் பேரை திமுகவில் இணைத்து கோவையை திமுக கோட்டையாக மாற்றுவோம். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி தெளிவான முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். 14 வயதில் நான்  திமுகவிற்கு ஓட்டு கேட்டு இருக்கேன்  தற்போது திமுகவில் தாய் கழகத்திற்கு இணைந்து உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரஸ் உடன் கூட்டணி கட்சியாக இருந்த திமுகவை விமர்சித்ததால் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுகவிற்கே கோவை செல்வராஜ் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.