ராமநதி - ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற கோரிக்கை - வைகோ!

ராமநதி - ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற கோரிக்கை - வைகோ!

இராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் கடையம் பகுதிகளில் நிலவும் வறட்சியைப் போக்க இராமநதி அணையின் உபரி நீரை ஜம்புநதி பாசன பகுதிக்கு கொண்டு வரும் இராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் ரூபாய் 41.08 கோடி மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசாணை எண்.292 இன் படி அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இத்திட்டத்திற்கான கால்வாய் வெட்டும் பணிக்கு கடையம் பெரும்பத்து, ஆவுடையானூர், வெங்கட்டாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இருந்து தனியார் நிலங்கள் 48 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, கால்வாய் வெட்டும் வகையில் நபார்டு நிதி 39 கோடியும், தமிழ்நாடு அரசு நிதி 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, 04.06.2020 அன்று ஒப்பந்தப்புள்ளியும் நிறைவுபெற்றது. ஆனால், இத்திட்டத்திற்கான நபார்டு நிதி உதவி நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருந்ததால்,  மத்திய நிதி அமைச்சருக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதையும் படிக்க : அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை தான்... வானிலை மையம் சொன்ன தகவல்!

இதற்கிடையில் 20.08.2020 அன்று பணி துவங்கி, கால்வாய் வெட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் துணை இயக்குனரால் பணி நிறுத்தப்பட்டு, வனத்துறையின் தடையின்மை சான்று பெற்று பணியைத் தொடர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பொதுப்பணித் துறையால் தடையின்மைச் சான்றுபெற விண்ணப்பிக்கப்பட்டு அது நிலுவையில் இருந்து வந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் கடிதம் மூலம் வலியுறுத்திய நிலையில், மாநில வனத்துறையின் வன உயிரின நல வாரியக்குழு முதலமைச்சர் தலைமையில் மாற்றி அமைக்கப்பட்டு, இத்திட்டத்திற்கான மத்திய அரசின் வனத்துறையின் அனுமதிக்கு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய வனக்குழு கூட்டத்தை கூட்டி அனுமதி வழங்குவதாக மத்திய வனத்துறை அமைச்சர்  பூபேந்தர்யாதவ் தெரிவித்தார். 

இந்நிலையில் தென்காசி நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இராமநதி - ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம் இந்திய மத்திய அரசின் வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். எனவே, வறட்சியான கடையம், கீழப்பாவூர் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 4050 ஏக்கர் பாசன வசதியையும், சுமார் நூறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பையும் வழங்கக் கூடிய இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட, இந்திய ஒன்றிய அரசின் வனத்துறை கோரியுள்ள கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு வனத்துறை விரைவாக வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.