உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறிய துபாய். எப்படி சாத்தியப்பட்டது...???

உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறிய துபாய். எப்படி சாத்தியப்பட்டது...???

100 சதவீத காகிதம் இல்லாத உலகின் முதல் அரசாங்கமாக துபாய் மாறியுள்ளது என்று அமீரகத்தின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார், இதனால் 1.3 பில்லியன் திர்ஹாம் அதாவது 35 கோடி டாலர்கள் சேமிக்கப்படுகிறது.

கடந்த 2018-ல் காகிதமில்லா திட்டத்தை அறிவிப்பதன் மூலம் துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றுவதற்கான முயற்சியை இளவரசர் கையில் எடுத்தார். இதனால் தற்போது துபாய் அரசாங்கத்தின் அனைத்து உள், வெளிப்புற பரிவர்த்தனைகள் மற்றும் நடைமுறைகள் இப்போது 100 சதவீதம் விரிவான டிஜிட்டல் அரசாங்க சேவை தளத்திலிருந்து நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

மிக குறுகிய காலகட்டத்தில் இந்த இலக்கை அடைந்தது, வாழ்க்கையை அதன் அனைத்து அம்சங்களிலும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான துபாயின் பயணத்தில் புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும் அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் ஒரு முன்மாதிரியாக விளங்கும் இந்த சாதனையானது, துபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் என்ற அந்தஸ்தை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் ஷேக் ஹம்தான் சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அரசாங்க நடைமுறைகள் மற்றும் குடிமக்களின் அடையாளங்களை உள்ளடக்கிய அரசாங்க செயல்பாட்டை பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்கள் செயல்படுத்த பட்டு வருகின்றன. ஆனால், சைபர் தாக்குதல்களுக்கு எளிதில் உட்படும் பாதிப்பு அதிகம் இருப்பதாக இத்திட்டத்தை எதிர்கின்றவர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும் பாதுகாப்பான முறையில் அடுத்த ஐந்து ஐம்பது ஆண்டுகளில் துபாயில் டிஜிட்டல் வாழ்க்கையை உருவாக்கவும் மேம்படுத்தவும் அதிநவீன உத்திகளை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் "துபாயின் டிஜிட்டல் பயணத்தின் புதிய கட்டமானது, வளர்ந்து வரும் ஸ்மார்ட் சிட்டியில் வசிப்பவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், செழிப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சிக்கான புதுப்பிக்கப்பட்ட வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதற்கும் எதிர்கால அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கும்," என்று குறிப்பிட்டார்.

துபாயில் தொடங்கப்பட்ட காகிதமற்ற உத்தியானது தொடர்ச்சியாக ஐந்து கட்டங்களில் செயல்படுத்தப்பட்டது, அவை ஒவ்வொன்றும் துபாய் அரசாங்கத்தின் வெவ்வேறு குழுக்களை பட்டியலிட்டன. ஐந்தாவது கட்டத்தின் முடிவில், எமிரேட்டில் உள்ள அனைத்து 45 அரசு நிறுவனங்களிலும் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. மேலும் பங்குபெறும் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் செயல்முறைகள் மற்றும் சேவைகளை தானியக்கமாக்கியது, இதனால் 36 கோடிக்கும் அதிகமான காகித நுகர்வுகள் குறைந்துள்ளதாக வெளிவந்த தகவல் அறிக்கை தெரிவிக்கிறது .

துபாய் அரசாங்கத்தின் முழுமையான டிஜிட்டல் மாற்றம் அனைத்து குடிமக்களுக்கும் ஸ்மார்ட் சிட்டி அனுபவத்தை மேம்படுத்துவதுடன் காகித பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களின் தேவையை முற்றிலும் நீக்குகிறது.12 முக்கிய வகைகளில் 130க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் சிட்டி சேவைகளை அரசாங்க நிறுவனங்கள் முழுவதும் அணுக அனுமதிக்கும் துபாய்நவ் செயலியின் மூலம் அங்கு வசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவங்களை எளிய முறையில் வழங்க டிஜிட்டல்மயமாக்கல் உதவுகிறது.

துபாயை முன்மாதிரியாக கொண்டு இன்னும் பல நாடுகள் காகிதமற்ற அரசாங்கங்களை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவும் கூடிய விரைவில் இந்த இலக்கை எட்டிவிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.