அரசு பள்ளி மாணவர்களுக்கு...! தங்க நாணயம் பரிசு வழங்கும் தலைமை ஆசிரியை...!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு...! தங்க நாணயம் பரிசு வழங்கும் தலைமை ஆசிரியை...!!

குடவாசல் அருகே பள்ளி சேர்க்கையை அதிகப்படுத்த தங்க நாணயம் பரிசு தருவதாக தலைமையாசிரியார் வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வருகிறார். 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்தில் உள்ள சேங்காலிபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், அந்த மாணவ மாணவிகளுக்குள் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்கப் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றும், பள்ளியின் தலைமையை இந்திரா வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து வருகிறார்.

வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிலும் ஆங்கில வழி கல்வி தனியார் பள்ளியில் மட்டும் இருந்த நிலையில். கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அனைத்து அரசு துவக்க பள்ளிகளும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏழை எளிய மக்களின் கனவை நனவாக்கியது. நல்ல வரவேற்பையும் பெற்றது.

சேங்காலிபுரம் அரசு துவக்கப்பள்ளியில், தற்போது இரண்டு வருடமாக மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ள நிலையில் கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் 'இந்திரா' மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக இந்த கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும், குலுக்கள் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வருகிற ஜூலை மாதம் 15- ஆம் தேதி "கல்வி வளர்ச்சி நாள்" அன்று, அவருக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் துண்டு பிரசுரத்தை வீடு வீடாக வழங்கி வருகிறார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் இந்திரா கூறுகையில், "மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். இந்த கல்வி ஆண்டில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியில் சேரக்கூடிய மாணவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து தங்க நாணயம் வழங்க உள்ளோம்" எனக்கூறினார்.  மேலும், பள்ளியில் சேருகின்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும்,  மழைக்காலங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு ஏதுவாக தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வேன் வசதி ஏற்பாடு செய்ய உள்ளோம் என்றும் கூறினார்.