பெயரளவில் மட்டுமே இல்லத்தரசிகளான பெண்களுக்கு,.. மகுடம் சூட்டும் அங்கீகாரம் தான் இந்த தீர்ப்பு....!

பெயரளவில் மட்டுமே இல்லத்தரசிகளான பெண்களுக்கு,..  மகுடம் சூட்டும் அங்கீகாரம் தான் இந்த தீர்ப்பு....!

" நெடுங்காலமாக பெண்களின் வலிகளின் குரல் வீட்டு சமையலறையில் பாத்திரங்கள்  போரிட்டு கொள்ளும் சத்தமாக தொடங்கி,  துவைக்கும் துணிகளுக்கு இடையே  நுரைகளாக கரைந்து, கணவனின் கைப்பைக்குள் வைக்கப்படும் டிஃபன் பாக்ஸ் -குள்ளேயே திறக்கப்படாமல் முடிந்துவிடுகின்றன...." 

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் அவர்களின் 'அறிய பங்களிப்பிற்கான அங்கீகாரம்' என்று ஒரு உரிமை குரலாய் ஒங்கி ஒலித்துள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்த கூடிய செய்தியாகவே இருக்கிறது. 

ஆம்..!  குடும்பத்தை கவனிப்பது, குழந்தைகளை கவனிப்பது, இல்லத்தை நிர்வகிப்பது  என இல்லத்தரசிகள் செய்யும் 24 மணி நேர பணிகளோடு கணவன்மார்கள் செய்யும் 8 மணி நேர வேலையை ஒப்பிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிவைத்த தொகையை பயன்படுத்தி, வாங்கிய சொத்துகளில் மனைவிக்கு உரிமை இல்லை எனக்கோரி கணவர் தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கானது தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் சம்பாதிப்பதும், மனைவி குடும்பத்தையும் குழந்தைகளும் கவனித்து கொள்வதும் பொதுவானது என்றும், மேலும், குடும்பத்தினை  மனைவி கவனிப்பதால் தான் கணவரால்  தங்களது பணியை முனைப்போடு செய்யமுடிகிறது எனவும் குறிப்பிட்டார்.

எனவே, " கணவன் சம்பாதிக்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமபங்கு பெற உரிமையுள்ளது " என தெரிவித்தார். 

அதோடு, குடும்பத்தையும், குழந்தைகளையும் அக்கறையுடன் கவனிப்பதில், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி,  குடும்ப மருத்துவர் போல ஒரு நாளில் 24 மணி நேரமும்  விடுமுறையில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் பணியை சம்பாத்தியத்திற்காக 8 மணி நேரம் கணவன் செய்யும்  வேலையோடு ஒப்பிட முடியாது என்றும் நீதிபதி இடஙக வழக்கின் மீதான உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், கணவனும், மனைவியும் ஒரு குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள் போல என குறிப்பிட்ட நீதிபதி, கணவனின் சம்பாத்தியத்தில் மூலம் குடும்பத்தை நிர்வாகம் செய்து தனது பங்கையும்  வழங்கும் இல்லத்தரசிகளுக்கு   கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் பங்கு கொள்ள உரிமை இருக்கிறது என உத்தரவிட்டார். 

அதனையடுத்து, குடும்பத்தை நிர்வகிப்பதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமோ இயற்றப்படவில்லை என குறிப்பிட்டவர், அந்த பங்களிப்பை 
 அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை  எனவும் குறிப்பிட்டார். 

தனக்கென ஆசை கனவுகள் எத்தனை இருந்தாலும், அவற்றை பெரிதும் காட்டிக்கொள்ளாமல், வேலைக்கு  சென்றாலும் சரி, வீட்டிலிருந்தாலும் சரி,  ஒரு மனைவியாகவோ, ஒரு தாயாகவோ, ஒரு மகளாகவோ,  தனது கணவன்மார்களுக்கு, தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் தேவையானவற்றை கவனித்துக்கொண்டும், அவர்களோடு பயணித்துகொண்டும், அவர்களின் எல்லா செயல்களுக்கும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ துணையாக இருந்துகொண்டு, அவர்களுக்கு உத்வேகத்தை தரும் பல பெண்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்றாக தான் இருக்கும்.   " தங்களையோ, தங்களின் சேவைகளையோ, தலையில் தூக்கி  வைத்து சீராட்டவில்லையென்றாலும், அவற்றை  உதாசீனப்படுத்தாமல் இருந்தாலே போதும் ", என்பது தான் அது. 

 சில நேரங்களில் கணவனுக்கு மனைவி உணவு பரிமாறும்போது, கூட சேர்ந்து சாப்பிடவில்லையென்றாலும், சாப்பிட்டியா ?  என ஒரு வார்த்தை வினவினாலே  போதும். அவர்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பது அவ்வளவுதான். கூட சேர்ந்து சமைக்க வில்லையென்றாலும், அந்த ஒருநாள் முடிவில் அவர்களுக்கென சிறிது  நேரம் ஒதுக்கி,  அவர்களை அமரவைத்து ஒரு தேநீர் இடைவேளையை ஒதுக்கி, உரையாடினாலே போதும், அன்றாட நிகழ்வுகளை தேநீரோடு சுவைத்து மகிழலாம்..! அதுவே அவர்களின் உடல்வலியோடு சேர்த்து மனவலியையுமே போக்கிவிடும். எதையும் எதிர்பார்க்காமல் தங்களது குடும்பத்தையும் குழந்தைகளையும்  
அன்பும் அக்கறையோடும் கவனித்து கொண்டு பெயரளவில் மட்டுமே இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு தீர்ப்பு வழங்கியது நிஜமாகவே ஓர் மகுடம் சூட்டும் அங்கீகாரம்தான்.


இதையும் படிக்க    | மாநிலத்திலேயே முதல் முறையாக, நியாய விலை கடையில் பெண்களுக்காக....!!