ஆண்களுக்கு முகநூல் மூலம் நிர்வாணமாக வீடியோ கால் செய்து மிரட்டும் கும்பல் - குற்றப்பிரிவுக்கு குவியும் புகார்கள்!  

சென்னையில் ஆண்களுக்கு முகநூல் மூலம் நட்பு வலை வீசி  நிர்வாணமாக வீடியோ கால் செய்து , அதைப் பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆண்களுக்கு முகநூல் மூலம் நிர்வாணமாக வீடியோ கால் செய்து மிரட்டும் கும்பல் - குற்றப்பிரிவுக்கு குவியும் புகார்கள்!   

தமிழகத்தில் நூதன முறையில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் முகநூப் மூலமாக பல்வேறு மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பெண்கள் பெயரில் முகநூல் பக்கம் உருவாக்கி ஆண்களைக் குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்தப் புகாரின் மூலம் கடந்த இரண்டு மாதத்தில் நான்கு பேர் 19 லட்ச ரூபாயை இழந்துள்ளனர். இந்தப் புகாரில் மருத்துவர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியின் உச்சம். குறிப்பாக முகநூல் பக்கத்தில் மோனிகா குமாரி மற்றும் சோனாலி மிஸ்ரா என்ற பெயரில் ஆண்களைக் குறிவைத்து முகநூல் மூலம் நட்புக்கான அழைப்பு வரும், முகநூலில் உள்ள புகைப்படத்தை பார்த்து ஆண்கள் அவர்களுடன் நட்பு அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள்.

அந்தப் பெண் முகநூல் உரையாடல் மூலம் உரையாடி ஆண்களின் தனிப்பட்ட நம்பரை பெற்றுக்கொள்வார். செல்போன் எண் பெற்றுக்கொண்ட உடனேயே,பெண் வாட்ஸ்அப் மூலமாக வீடியோ கால் செய்வார். அதில் பெண் நிர்வாணமாக வீடியோ காலில் தோன்றுவார். அவ்வாறு தோன்றும் பெண்கள் தொடர்புகொண்ட ஆண்களையும் ஆபாசமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வார். பெண்ணின் ஆசை வார்த்தையை நம்பிய சில ஆண்கள் வீடியோ காலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அந்த வீடியோ கால்  பதிவு செய்யப்படுகிறது.

 அதன்பின் அந்த வீடியோ கால் பதிவை வைத்து அந்தப் பெண் பணம் கேட்டு மிரட்டுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக இந்த வீடியோவை சமூக வலைத் தளத்திலும் நண்பர்களுக்கும் பகிர்ந்து விடுவேன் எனக்கூறி மிரட்டுவதாக புகாரில் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவர் ஒருவர் இதுபோல் மாட்டிக்கொண்டு அந்த பெண்ணின் முகநூல் பக்கம் குறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார். அதற்கு பழிவாங்கும் விதமாக கல்லூரி மாணவரின் நண்பர்கள் மற்றும் தாய் உள்ளிட்டோருக்கு, அந்த மாணவன் நிர்வாண பெண்ணோடு பேசிய வீடியோ பதிவை அனுப்பி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து மற்ற நண்பர்களுக்கும் வீடியோ சென்றுவிடக்கூடாது என்பதற்காக 8 ஆயிரம் ரூபாய் பணத்தை போன் பே மூலம் அந்தப் பெண்ணிற்கு அளித்துள்ளார். அதன்பின் ஆய்வு செய்தபோது தான் இந்த மோசடி செய்வது பெண் என்ற பெயரில் ஒரு கும்பல் செயல்படுவது தெரியவந்துள்ளது. மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவரும்  இதேபோல் பாதிக்கப்பட்டு 6000 ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதேபோன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் சேர்ந்த ஒருவர் 1.93 லட்சமும், தியாகராய நகரிலிருந்து பாதிக்கப்பட்ட நபர் 17 லட்ச ரூபாயும் இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடிக் கும்பல் மிரட்டும் போது தாங்கள் ஒரு யூடியூப் சேனல் நடத்துவதாகவும் அல்லது கிரைம் போலீஸ் எனக் கூறியும் மிரட்டி பணம் பறிப்பதாக புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது makemefriends.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் இதுபோன்ற மோசடி கும்பல் பெண் எனக் கூறிக்கொண்டு மோசடியில் இறங்குவதாக புகார்கள் வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் 2019 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அந்த மோசடி கும்பலுக்கு பணத்தை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு புகாரிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே மாதிரியான முறையில் முகநூல் மூலம் பணத்தை பறிக்கும் இந்த கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சைபர் கிரைம் அவர்கள் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். புகார்களுக்கு பின்னால் இருக்கும் மோசடி நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள்தானா என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதுபோன்று அடையாளம் தெரியாத பெண்களின் நட்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும் அவர்கள் நிர்வாணமாக வீடியோ கால் செய்தால் உடனடியாக அழைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.