இரண்டு சாமியார்கள் இடையே மோதல்...’தவயோகி திருஞானம்’ மீது ’காளிமாதா’ பாலியல் புகார்!

தான் காளியின் அவதாரம் எனக் கூறிக்கொள்ளும் பெண் சாமியார், சிவன் அழைப்பதாகக் கூறி போலி சாமியார் ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு சாமியார்கள் இடையே மோதல்...’தவயோகி திருஞானம்’  மீது  ’காளிமாதா’ பாலியல் புகார்!

’நாங்களும் சீவுவோம்... இறங்கி போயி சீவுவோம்... சீப்பும் வச்சிருக்கோம்...’ என்று வடிவேலு சொல்வதைப் போல, ‘நாங்களும் கோவக்கார சாமியார் தான்... வெளிநாடுலாம் போவோம்... 30க்கும் மேல கொலை பண்ணிருக்கோம்...’ என்று சாமியார் ஒருவர் பாலியல் இச்சைக்கு அழைத்து, கொலைமிரட்டல் விடுத்துள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கிய மாதா தெருவில் வசித்து வருபவர் பவித்ரா. முகம் முழுக்க அலங்காரம், உதட்டில் பளீர் சாயம், அவிழ்த்துவிட்ட கூந்தல், கழுத்துக்கே வலிக்கும் அளவுக்கு தங்க நகைகள் என காட்சிதரும் இவர், தன்னை காளியின் அவதாரம் எனக் கூறிக்கொள்வதால், காளிமாதா பவித்ரா என அழைக்கப்படுகிறார். 

தன்னிடம் ஆசி பெற்றதாலேயே ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனதாகவும், தன்னை வரவேற்காததால் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை இழந்ததாகவும் கூறி கவனம் பெற்ற காளிமாதா பவித்ரா, தவயோகி திருஞானம் என்ற சாமியார் அளித்த புகாரின்பேரில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், நிலமோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள பவித்ரா, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில், அதே சாமியார் மீது பாலியல் வழக்கு தொடுத்துள்ளார். 

தான் சாமியார் அல்ல என்றும், இந்தியா முழுவதும் உள்ள கோவில்களுக்குச் செல்லும் தர்மாச்சாரியா என்றும் விளக்கம் அளித்துள்ள பவித்ரா, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், பாலிவுட் நடிகர் சோனுசூட் உட்பட பல பிரபலங்களும் தன்னிடம் ஆசிபெற வருவதாகக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். 

தவயோகி திருஞானம் என்ற போலி சாமியார், தன்னை ஏமாற்றி பணமோசடி செய்துவிட்டதாகவும், புலித்தோல், மான்தோல், மயில்தோகை மற்றும் போதைப்பொருள் விற்பனை என சட்டவிவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதோடு, நீண்டகாலம் வாழவேண்டும் என்ற ஆசையில் மயில் ரத்தத்தை சுவைத்து வருவதாகவும் பவித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தான் காளியின் அவதாரம் என்பதால், தன்னைத்தானே சிவன் எனக் கூறிக்கொள்ளும் சாமியார் திருஞானம், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறும் பவித்ரா, ’வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் தவயோகியை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று திருஞானம் பேசி அனுப்பிய ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். 

அதேசமயம் தன்னை எதிர்ப்பவர்களை சத்தமே இல்லாமல் கொலை செய்து விடுவதாகவும், இதுவரை 30க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளதாகவும் கூறியுள்ள திருஞானம், தாம் சிவனின் அவதாரம் என்பதால், 900 கொலை வரை செய்யலாம் என்றும் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கெல்லாம் உடந்தையாக நிலக்கோட்டை சார்பு ஆய்வாளர் தயாநிதி மற்றும் ஆய்வாளர் குரு வெங்கட் ஆகியோர் செயல்படுவதாகவும், இவர்கள் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறிய பவித்ரா, கட்டுக்கட்டாக புகார் மனுக்களை கையில் வைத்துக்கொண்டு, டிஜிபி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.