எதிர்கட்சிகளும் போற்றும் வகையில் ஆட்சி...  படிக்காத மேதை, கர்மவீரர் வீரரின் பிறந்த தினம்...

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டதை தொடங்கிய முதல்வர் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்த கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

எதிர்கட்சிகளும் போற்றும் வகையில் ஆட்சி...  படிக்காத மேதை, கர்மவீரர் வீரரின் பிறந்த தினம்...

நாடு பார்த்ததுண்டா? 

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் என்றால் அவர் பெருந்தலைவர் காமராஜர்தான். இந்தியாவின் கருப்பு வைரமான, காமராஜர் நாட்டுக்கு அறிமுகமான நாள்தான்  ஜூலை 15-ம் தேதி. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றாலும், அவர் பெற்றிருந்த பட்டங்கள் எல்லாம், படித்தவர்கள் பலரும் வாங்காத பட்டங்கள்தான். 

படிக்காத மேதை, கர்மவீரர், தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர் என்ற பட்டங்களுடன் அழைக்கப்படும் காமராஜர், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ந்த மகத்தான மக்கள் தலைவர். அரசியல் ஆளுமையும், தொண்டர்கள் பலமும் மிக்கவரான காமராஜருக்கு, கிங் மேக்கர் இப்படி எத்தனையோ பெயர்களைப் பெற்ற ஒப்பற்ற தலைவர்தான் கர்மவீரர் காமராஜர். அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் கூறி வருவது தற்போது வாடிக்கையாகவே மாறிப் போய் விட்டது. ஆனால் அரசியலில் ஒரு சிறிய குற்றச்சாட்டுகள் கூட இல்லாமல் தூய்மையான மனதுடன் நல்லாட்சியைக் கொடுத்தவர் என்றால் ஒரே ஒருவர் அவர்தான் காமராஜர்.

விருதுநகரில் பிறந்து வளர்ந்த சிவகாமியின் செல்வன் காமராஜர் தமிழ்நாட்டுக்கு கிடைத்ததை வரம் என்றேதான் எண்ண வேண்டும். தனக்கென வாழாமல் தனது நாட்டுக்காக, மக்களுக்காகவே இறுதி காலம் வரையில் வாழ்ந்திருக்கிறார் என்றால், காமராஜர் வெறும் மனிதப் பிறவியா? அல்லது, தெய்வப்பிறவியா? என்றேதான் கேட்கத் தோன்றும். 

தற்போதைய அரசியல் உலகில், சிறிய வார்டு கவுன்சிலர் ஆகி விட்டால் கூட, அதன் பதவியை வைத்துக் கொண்டு வேண்டியவற்றையெல்லாம் வாங்கிக் கொள்வார்கள். சில நேரங்களில் அபகரித்துக் கொள்வார்கள். பதவியைக் காண்பித்து, பெரிய பெரிய அதிகாரிகளையும் மிரட்டி தனக்கு சாதகமான செயல்களை செய்து கொள்ளும் அற்பப் பிறவிகள் அனைவருமே காமராஜரின் பெயரைச் சொல்வதற்கே அருகதையற்றவர்கள் என்றேதான் சொல்ல வேண்டும். 

அரசியலில் இருந்த காலம் வரையில் தனது பதவியை வைத்து தனக்காக எந்தவொன்றையும் செய்து கொள்ளாமல், முழுக்க முழுக்க அரசியலையே மூச்சாக சுவாசித்து வந்தார் காமராஜர். அனைவருக்குமே தான் ஒரு நல்ல உயரத்தை அடைந்து விட்டால், தன்னோடு தாயை வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தோடு சந்தோஷமாக ஏகபோகமாக வாழ வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்தான் காமராஜர். தன்னுடன் தாயை வைத்துக் கொண்டால், அவரை பார்ப்பதற்கு உறவினர்கள் வருவார்கள். உறவினர்களை கவனித்துக் கொள்வதற்கு பணம் நம்மிடம் இல்லை. நமது பெயரைச் சொல்லி பலரும் சொகுசு அனுபவித்துக் கொள்வார்கள் என்று நினைத்தவர், பெற்ற தாயையே சொந்த ஊரில் வைத்து விட்டு சென்னையில் வசித்து வந்தார். 

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் அணைகள் கட்டியது, கஜானா பணத்தை மக்களுக்காக மட்டுமே செலவழிப்பது, வீண் விளம்பரங்களை தவிர்ப்பது, உயர் பதவியில் இருந்தாலும், ஒரு சாதாரண குடிமகனின் உரிமைக்கும் மதிப்பளிப்பது என அவரிடம் கற்றுக் கொள்வதற்கான பாடங்கள் ஏராளம் உள்ளன. 

காமராஜரின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்கள் வந்தன. தொழிற்சாலைகள், நீர்த்தேக்க அணைகள், பாலங்கள், மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள், கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி எனக் காமராஜரின் சாதனைகளை மிகப்பெரிய பட்டியலே போடலாம். கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். 

காமராஜர் போல நடந்து கொள்வேன் எனக் கூறிக் கொண்டாலும், காமராஜர் ஆட்சியைத் தரப்போகிறோம் என்று அரசு அதிகாரிகள் கூறிக் கொண்டாலும், அவரைப் போல ஒரு நாள் கூட வாழ முடியாது என்பதுதான் உண்மை. உண்மையைப் போல எவ்வளவுதான் நகல் எடுத்தாலும், நகல் நகல்தான். அசல் அவர் ஒருவர்தான்.

காமராஜர் போல எவரும் இல்லவும் இல்லை. தனக்காக அனைத்தையும் செய்யும் அரசியல் வாதிகளின் மத்தியில் இப்படி ஒரு அரசியல்வாதி தவறு இப்படி ஒரு தலைவன் கிடைப்பது என்பது மிக அரிதுதான். ஒருவரது பிறப்பு சாதாரணமாக அமைந்து விடலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக அமைய வேண்டும் என்பதற்கு சாட்சியாக திகழ்ந்த காமராஜர் அவதரித்த இந்த நாள் கொண்டாடக்கூடியது மட்டுமல்ல, போற்றக்கூடியதும் கூடத்தான். எளிமையாக வாழ்ந்து கடமையில் கண் போல் இருந்து மறைந்த காமராஜர் ஓர் தெய்வப்பிறவி.