அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி!

18 மணி நேர சோதனைக்கு பின் அமலாக்கத்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையானது நிறைவு பெற்ற நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சுவலியில் அமைச்சர் செந்தில்பாலாஜி துடித்த நிலையில் அவர், சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் வருகை தந்தனர். ஆனால் செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினால் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், காலை 9 மணிக்கு பிறகே அவரின் உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது எனவும், செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைச்சர் என்பதால் செந்தில்பாலாஜி பழிவாங்கப்பட்டதாகவும், இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல் எனவும் குற்றஞ்சாட்டினார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தியதாகவும், அதற்கான காயங்கள் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் சுயநினைவின்றி இருப்பதாகவும், அவரது ஈசிஜி இயல்பு நிலையில் இல்லை எனவும் கூறினார். 

இதையும் படிக்க : வானதி சீனிவாசன் அலுலகத்துக்குள் புகுந்த நபர் சடலமாக மீட்பு..! என்ன நடந்தது..? வெளியான சிசிடிவி காட்சிகள்...!

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவரது வழக்கறிஞர் இளங்கோ, அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும், காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் கைது நடவடிக்கைக்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், அவர் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். 

இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் சட்டவல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையின் முன்பு ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.