ஆளுநருக்கே ஆர்டிஐயா?? பதிலளிப்பாரா ஆர். என். ரவி!!!!!

ஆளுநருக்கே ஆர்டிஐயா?? பதிலளிப்பாரா ஆர். என். ரவி!!!!!

ஆளுநரின் சர்ச்சை பேச்சுகள்:

தேசிய கல்விக் கொள்கை தொடங்கி நீட் வரை, துணை வேந்தர்கள் நியமனம் முதல் பல்கலைக்கழகங்களின் பாடதிட்டம் வரை, ஆளுநர் ஆர்.என். ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர் சர்ச்சைக்கு வித்திட்டு வருகிறது. அத்துடன், எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை கிடப்பில் போட்டது, நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கால தாமதம் செய்தது என ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகளும் தொடர் சர்ச்சைகளுக்கும் ஆளும் திமுகவுக்கும் ஒரு பகை உறவை வெளிப்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. 


ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள்:

நடிகர் ரஜினி காந்த் உடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து அரசியல் பேசியதாக செய்தி பரவிய போதே, ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசுவது சரியா என்ற கேள்வியை அரசியல் கட்சிகள் எழுப்பின.  அத்துடன், தேசிய கல்விக்கொள்கை, துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர். என். ரவியின் பேச்சுகள் சனாதன கருத்தை விதைக்கும் வகையில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்


சனாதன கருத்தைப் பரப்புகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி:

ஆளுநரின் செயல்பாடுகளும் பொது மேடைகளில் அவர் கூறும் கருத்துக்களும் சனாதன கருத்தை பரப்புவதாக அரசியல் கட்சிகள் கூறுவது கடந்த சில மாதங்களாகவே தொடர் விவாதமாகியுள்ளது. இந்த பின்னணியில் தான், வழக்கறிஞர் எஸ்.  துரைசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக ஆளுநர் ஆர். என். ரவிக்கு சில கேள்விகளை முன்வைத்து எழுதிய கடிதம் இணைய தளத்தில் பேசு பொருளாகியுள்ளது. அதில், ”நீங்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில்  சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறீர்கள்.  இதைப் பார்க்கும் போது நீங்கள்தான் சனாதன தர்மத்தில் அதிகாரம் பெற்றவர் என தெரிகிறது.  தகவல்கள் உங்களிடம்  பிரத்தியேக அறிவில் இருப்பதால், நான் உங்களிடமிருந்து தகவல்களை பெற விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார். 


பதிலளிப்பாரா ஆளுநர் ஆர்.என்.ரவி: 

1.  சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்னென்ன?

2.  சனாதன கொள்கைகள் குறித்த உரைகள் ஏதேனும் உள்ளனவா அல்லது செவிவழி மட்டும்தானா?

3.  சனாதன தர்மத்தை தோற்றுவித்தவர் அல்லது எழுதியவர் யார்?

4.  தமிழ் இலக்கியங்களில் சனாதன தர்மம் குறித்து பேசப்பட்டுள்ளதா அல்லது திராவிடன் கலாச்சாரத்தில் கண்டறியப்பட்டுள்ளதா?

5.  சனாதன தர்மம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது வேறு ஏதேனும் நாடுகளில் பின்பற்றப்படுகிறதா?

6.  சனாதன தர்மம் கிறிஸ்தவர்கள் மற்றும் மொகம்மதியர்களால் பின்பற்றப்படுகிறதா?

7.  இந்து என்பவர் யார்? பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த சொல் இடம் பெற்றுள்ளதா?

8.  லக்னோவில் 1964ல் லுகத்-இ-கிசாரி என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெர்சிய அகராதியில் இந்து என்ற சொல்லுக்கு அர்த்தம் திருடன், அடிமை, வழிப்பறியாளர் என குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தங்கள் சரியா?

9.  ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு இந்துத்துவாதத்தை பற்றி எதுவும் தெரியாது என்பது சரியா?

10.  ’இந்து’ என்ற சொல்லை உருவாக்கியவர் யார் மற்றும் ’இந்து’ என்ற சொல்லுக்கான அர்த்தம் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

11.  சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்கள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டனரா?

12.  அவ்வாறு அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் எனில் எங்கு வசிக்கிறார்கள். அவர்களுடய அன்றாட பணிகள் என்ன மற்றும் அவர்களுக்கான உடைகளை தைத்து கொடுப்பவர்கள் யார் மற்றும் அவர்களுக்கான உடைகள் மற்றும் நகைகளை எங்கே வாங்குகிறார்கள்?

13.  ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்(ஆர்எஸ்எஸ்) சங்கத்தின் உறுப்பினரா நீங்கள்?

14.  மிகப்பெரும் தத்துவஞானியும் திராவிட இயக்கத்தின் நிறுவருமான தந்தை பெரியர் ஈ. வெ. ராமசாமியின் கொள்கைகளை ஏற்றுகொள்கிறீர்களா?  ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன்?

15.  இந்து மதத்தில் சதுர் வர்ண தர்மத்தைத் தோற்றுவித்தது யார்?

16.  இந்துத்துவாதத்தின் சதுர் வர்ண தர்மத்தை பின்பற்றி அதை செயல்படுத்துகிறீர்களா?

17.  மற்ற சமயத்தவர்களால் ஏன் சதுர் வர்ண தர்மம் பின்பற்றப்படவில்லை?

18.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பகுதி அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேசும் அதிகாரம் அளித்துள்ளது?

19.  அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காதபோது அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் பேசுவது அரசியலமைப்பு விதி மீறல் இல்லையா?

இதையும் படிக்க: மறக்கப்பட்டதா அல்லது மறைக்கப்பட்டதா ஐஎன்எஸ் விக்ராந்த்தில் காங்கிரஸின் பங்களிப்பு....!!!!