சிதறி கிடந்த யானையின் உடல் உறுப்புகள்...! பொறுப்பற்ற வனத்துறையினர்...!!   

சிதறி கிடந்த யானையின் உடல் உறுப்புகள்...! பொறுப்பற்ற வனத்துறையினர்...!!   

பென்னாகரம் அருகே பிரேத பரிசோதனை செய்த யானையை வனத்துறையினர் அடக்கம் செய்யாததால்   ஆங்காங்கே யானையின் உடல் உறுப்புகள் சிதைந்து காணப்படுவது காண்போர் நெஞ்சை பதற வைக்கிறது. 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன்  சுற்று வட்டார பகுதிகள் அடர்ந்த வனம் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இந்த வனத்தில் காட்டு யானைகள், மான்கள், முயல்கள், காட்டுப் பன்றிகள், மயில்கள், காட்டுக்கோழி ஆகிய வன உயிரினங்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. 

இந்த நிலையில் சின்னாறு பளந்தூர் மண்டு மாரியம்மன் வனப்பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க  காட்டு பெண் யானை ஒன்று கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளது. இதை கண்ட வனப்பகுதியில் ஆடு மேய்ப்பர்கள் வனத்துறைக்கு  தகவல் அளித்துள்ளனர். பின்னர்  காட்டு யானைக்கு வனத்துறை சார்பில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம்  சிகிச்சை பலனின்றி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. 

இதனையடுத்து வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து  கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உடற்கூறாய்வு  செய்யப்பட்ட யானையின் உடலை அப்படியே வனத்துக்குள் விட்டுச் சென்றுவிட்டனர். உடல் கூறு ஆய்விற்க்காக யானையின் உடல் துண்டு துண்டாக அறுக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே கிடந்துள்ளது. அப்பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் ஏதோ துர்நாற்றம் வீசி வருவதாக தேடிப் பார்த்தபோது காட்டு யானையை  துண்டாக வெட்டி அப்படியே விட்டு சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபோன்ற காட்டு யானைகள் இறந்தால் முறையாக அடக்கம் செய்யாமல் வனத்துறையினர் அப்படியே காட்டுக்குள் உடலை விட்டு செல்வதாகவும் மேலும் வனப்பகுதியில் சரியான முறையில் யானைகளுக்காக வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப் படுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் வனத்துறையினர் மீது குற்றம் சுமத்துகின்றனர். காட்டிற்குள் தண்ணீர் இல்லததால் தண்ணீருக்காக காட்டை விட்டு யானைகள் வெளியே செல்வதாகவும் அப்போது விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதக்கவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 

முன்னதாக பத்து நாட்களுக்கு முன்னர் தண்ணீர் குடிக்க சென்ற யானை ஒன்று சேற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வனதுறையினர் வனவிலங்குகளை கையாள்வதில் அவற்றின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே வனவிலங்கு ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் மனித நேயம் இல்லாத இது போன்ற செயல்களில் ஈடுபடும் வனத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.