பல ஆண்டுகளுக்கு முன் நான் வந்தபோது நீங்கள்.... பாசத்துடன் நினைவுகூர்ந்த பிரதமர்.. நெகிழ்ந்து போன எம்.எல்.ஏ காந்தி..

பிரதமர் மோடியை சந்தித்த தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள்..!

பல ஆண்டுகளுக்கு முன் நான்  வந்தபோது நீங்கள்.... பாசத்துடன் நினைவுகூர்ந்த  பிரதமர்.. நெகிழ்ந்து போன எம்.எல்.ஏ காந்தி..

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுன் கூட்டணி வைத்து 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக-4 இடங்களில் வெற்றி பெற்றது. 

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நாகேந்திரன், சரஸ்வதி ஆகியோருடன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றனர். 35 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

பாஜகவிற்கு எதிராக தமிழ்நாட்டில் பலரும் குரல் கொடுத்தும் வரும் நிலையில், 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதை பெரிதாக கருதுகிறது பாஜக தலைமை.  20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளதை எதிர்பாராத வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், பிரதமரை சந்தித்த தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் நால்வரும், தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் பெரும்பாலான திட்டங்களுக்கு தற்போதைய திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிவித்தனர். குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான கமிட்டி அமைத்தது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விரைவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம், குடியுரிமை சட்டம் மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசின் நிலைபாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இனி வரும் காலங்களில் பாஜகவின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் நிற்க வேண்டும் என்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் நான்கு பேருக்கும் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.காந்தியை சந்தித்ததும் பிரதமர் மோடி பல வருடங்களுக்கு முன்பு தங்களை கன்னியாகுமரியில் கண்டது என கூறி நெகிழ்ந்துள்ளார். 

பல வருடங்களுக்கு முன்பு நான் கன்னியாகுமரி வந்த போது,நீங்கள் மாவட்ட தலைவராக இருந்தீர்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா எனக் கூறி பழைய சந்திப்பை நினைவு கூர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி. 

பிரதமர் உடனான 35 நிமிட சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக, மகிழ்ச்சிகரமாக நேர்மறை சக்தியை அளிக்கும் ஒன்றாக அமைந்தது என்றும் தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி காட்டிய ஆர்வமும், அக்கறையும் எங்களை மெய்சிலிர்க்க வைத்ததாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவையும் 4 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தனர். அப்போது அவர், “சட்டமன்றத்தில் பேசும் எந்தவொரு தகவலாக இருந்தாலும் முழுமையாக ஆராய்து, அறிந்து பேச வேண்டும் எனவும், மோடி. அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார் ஜே.பி.நட்டா. மேலும் மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர், கட்சித் தலைவர்களின் செயல் திட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும்” அவர் என்று கேட்டுக் கொண்டதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.