”ஆம்பூர் பிரியாணி திருவிழா” விவகாரத்தில் அதிரடி உத்தரவிட்டது ஆணையம்...!

”ஆம்பூர் பிரியாணி திருவிழா” விவகாரத்தில் அதிரடி உத்தரவிட்டது ஆணையம்...!

ஆம்பூர் பிரியாணி திருவிழா:

ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி பிரியாணி ஆகிய மூன்றையும் சேர்த்தே குறிக்கிறது. இந்நிலையில்  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் புவிசார் குறியீடு(தனி அடையாளத்தை குறிக்கும் வகையில்) பெரும் நோக்கில் கடந்த மே மாதம் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022” நடைபெறும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். 

பீப் பிரியாணியை தவிர்த்த மாவட்ட ஆட்சியர்:

“ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022” தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் “பீப் பிரியாணி” தவிர அனைத்து வகையான பிரியாணி வகைகளும் கிடைக்கும் என்று தெரிவித்தார். ஆனால், ஏன் பீப் பிரியாணி தவிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைக் செய்திக் குறிப்பில் குறிப்பிடவில்லை.

கண்டனம் தெரிவித்த தலித் அமைப்புகள்:

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பையும் விளம்பரத்தையும் கண்ட தலித் அமைப்புகள், இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை என்று கூறினர். அப்படி ஒருவேளை நீங்கள் பீப் பிரியாணியை தவிர்த்துவிட்டு  பிரியாணி திருவிழாவை நடத்தினால், அதன்  எதிரிலேயே பீப் பிரியாணி கடைகளை நடத்துவோம் என்று கண்டனம் தெரிவித்தனர். 

கோரிக்கை வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி:

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் சி. ஓம்பிரகாசம் என்பவர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு கடந்த மே மாதம் 12 ஆம் தேதி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ”ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். மட்டன் சிக்கன் சாப்பிடாத எங்களுக்கு முக்கிய உணவே மாட்டிறைச்சி தான். அதனை விழாவில் தவிர்த்து எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதிகாரிகள் நிகழ்த்துகின்றனர். இது எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் ரீதியான வன்முறையாகவே நாங்கள் உணர்கிறோம். எனவே, மாண்புமிகு ஆணையம் என்னுடைய புகாரை ஏற்று மாட்டிறைச்சி பிரியாணியை விழாவில் அனுமதித்து நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை:

எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதிகாரிகள் நிகழ்த்துவதாக கூறி விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் சி. ஓம்பிரகாசம் அனுப்பிய மனுவை பரிசீலனை செய்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், ”அரசின் மாவட்ட நிர்வாகம் நடத்தும் 20 வகையான பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணியை மட்டும் தவிர்த்து இருப்பது, அங்கு வசிக்கும் மக்களுக்கு எதிரான அதிகாரப்பூர்வமான பாகுபாடாகும். இதற்கு ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று விளக்கம் கேட்டு, கடந்த மே மாதம் 12ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியது.

ஒத்தி வைப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அனுப்பிய அறிக்கையை மழையைக் காரணம் காட்டி பிரியாணி திருவிழாவை ஒத்தி வைப்பதாக ஆட்சியர் அறிவித்தார்.

பதில் அறிக்கை விடுத்த ஆட்சியர்:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அனுப்பிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், பன்றி இறைச்சிப் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். பிரியாணி செய்வதற்காக பன்றி இறைச்சி எங்குமே பயன்படுத்தபடுவதில்லை என்றாலும் ஆம்பூரில் உள்ள முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இப்படியொரு வாதத்தை ஆட்சியர் முன் வைத்திருந்தார். 

உத்தரவு பிறப்பித்த ஆணையம்:

ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்றுக்கொண்டாலும், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி , இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பித்திருக்கிறது. ஆணையம் பிறப்பித்த இந்த உத்தரவு, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிக்களுக்கும் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.