தாய்ப்பால் எனும் ஜீவநதி... ஆகஸ்ட் 1முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம்...

தாய்ப்பால் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. 

தாய்ப்பால் எனும் ஜீவநதி... ஆகஸ்ட் 1முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம்...
மண்ணில் தோன்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கக்கூடிய, கிடைக்க வேண்டிய அற்புதமான முதல் பரிசு தாய்ப்பால். பிறந்த குழந்தைகளுக்கு உணவாக மட்டுமல்லாமல், மருந்தாகவும் தாய்ப்பால் அமைகிறது என்றால் மாற்று கருத்து இல்லை. அப்படியான தாய்ப்பாலை குழந்தைக்கு ஊட்டினால் தங்களின் அழகு குறையும் என்ற தவறான எண்ணம் கொண்டுள்ளோருக்கு தாய்ப்பாலின் மகத்துவம், தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
 
எப்படித் தாய்ப்பாலூட்டுவது ஒரு பக்கம் உடல் எடையைக் குறைக்கிறதோ, அதுபோலவே, ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கச் செய்து, பெண்களின் முகப் பொலிவையும், அழகையும், தாய்ப்பாலூட்டுவது கூட்டுகிறது என்றே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது, மார்பகப் பகுதியில் ஏற்படும் ரத்த நாளப் புடைப்பு உண்டாகாமல் தடுப்பது, மார்ப்பக புற்றுநோய் வராமல் தடுப்பது எனத் தாய்ப்பால் ஊட்டுவதில் இருக்கும் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
 
இந்த வருட ‘உலக தாய்ப்பால் வார’ மையக் கருத்து, ‘தாய்ப்பாலைப் பாதுகாத்தல்: ஒரு பகிர்ந்த பொறுப்பு' என்பதாக இருக்கிறது. அதில் சந்தேகமென்ன..?
 
பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப் பால் மட்டும் தான், குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து வெளிப்படும் பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். புரோட்டீன், கொழுப்பு அதிகமுள்ள இந்த பால் தான் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய முதல் தடுப்பு மருந்து என்றும், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இந்த பாலை கொடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போதைய கால சுழற்சியில் வேலைக்குச் செல்லும் பெண்களும் தாய்ப்பாலை பாதுகாப்பான முறையில் எடுத்து வைத்து கொடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. இதேபோல், தாய்மார்கள் பணிபுரியும் இடங்களிலும், பேருந்து உள்ளிட்ட பொது இடங்களில் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன.
 
பாசமும் நேசமும் கலந்த தாய்ப்பால் எனும் அமுதத்தை உட்கொள்ளும் குழந்தைகள், பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்வார்கள் என்பது முன்னோர்களின் கூற்று. ‘உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’ என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை, குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.