அதிமுகவை வச்சி செய்யும் ஊடகங்கள்..பாஜகவால் நொந்து போன எடப்பாடி, ஓ.பி.எஸ்சின் அதிரடி முடிவு.! 

அதிமுகவை வச்சி செய்யும் ஊடகங்கள்..பாஜகவால் நொந்து போன எடப்பாடி, ஓ.பி.எஸ்சின் அதிரடி முடிவு.! 

எதிர் எதிர் மேடைகளில் பிற கட்சிகளை விமர்சித்துக்கொண்டிருந்த அரசியல்வாதிகளை ஒரே இடத்தில உக்காரவைத்து நேருக்கு நேருக்கு பேசவைத்தது தொலைக்காட்சி விவாதங்கள் தான். இதன் மூலம் ஒருவர் வைக்கும் குற்றசாட்டுகளுக்கு நேரடியாக ஒருவர் பதில்சொல்ல முடிகிறது.மேலும் பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்கள் நிலைபாட்டை கூறுவதால் பொதுமக்களிடையேயும் இது பிரபலமானது. அதனால் தங்கள் சார்பாக பேச அனைத்து கட்சிகளும் சிலரை நியமிப்பது வழக்கம்.

இந்நிலையில், ஊடக விவாதங்களில் அதிமுக கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ, யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

"மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்சினைகள் பல இருக்கின்றபோது, அதைப்பற்றி எல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல், ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக் கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம்போன போக்கில் ஊடக அறத்திற்குப் புறம்பாகவும் கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும், விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

மேற்சொன்ன காரணங்களால், ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிகொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாகக் கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும் வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கை வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் பாஜக தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாஜக, அதிமுக கூட்டணியில் தான் தொடர்ந்து வருகிறது. ஆனால் இந்த கூட்டணியில் கொள்கை காரணமாக தொடர்ந்து பல முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அப்போது பாஜகவுடன் வைத்த கூட்டணியே இந்த தோல்விக்கு காரணம் என்று அதிமுக தலைவர்கள் சிலர் கூறினார்கள்.

இந்த விவகாரம் தொலைக்காட்சி விவாதங்களிலும் எதிரொலித்தது. மோடி எதிர்ப்பு அலை தான் அதிமுக தோல்விக்கு காரணம் என அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் கூட வெளிப்படையாக கூறினார்கள். இது அதிமுக-பாஜக இடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் முதல்வர் வேட்பாளர் பற்றி பாஜகவினர் கூறியது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது. தொலைக்காட்சி விவாதங்களிலும் இது தொடர்பான கேள்விக்கு அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பதிலளிக்க திணறினார்கள். 

இப்படி பாஜகவினர் பொது அரங்கில் சர்ச்சையான விதத்தில் பேசுவது அதிமுகவுக்கு தர்ம சங்கட நிலையை கொடுத்தது. இதில் நேரடியாக பாதிக்கப்படுவது என்னவோ அதிமுக செய்தி தொடர்பாளர்கள் தான். அவர்களை நோக்கி எழுப்பப்பட்ட நேரடியான கேள்வியை எதிர்கொள்ள தடுமாறினார்கள். மேலும் பாஜகவினர் கருத்துக்காக அதிமுகவினர் பொறுப்பேற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து தற்போது ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது எல்.முருகன் கொங்கு நாடு என்று தன் சுயவிவர குறிப்பில் குறிப்பிட்டிருந்தது புது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் கொங்கு நாடு பற்றி பாஜக தலைவர்களும் கருத்து தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் பாஜகவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. 

இதற்கு பதில் கூறியே ஆகவேண்டிய கட்டாயத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி "கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை யாரும் விதைக்க வேண்டாம்.கொங்கு நாடு என்ற பிரிவினை வந்தால் தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கப்படும்" எனக் கூறினார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாதங்களுக்கு சென்றால் கூட்டணி கட்சி என்ற முறையில் பாஜகவின் இந்த கருத்துக்கு அதிமுக பதில் சொல்லவேண்டியிருக்கும். இது எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தால் தான் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிக்க அதிமுக முடிவுசெய்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஆனால் அதிமுகவின் இந்த முடிவை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தும், கலைய்த்தும் வருகிறார்கள். மேலும் இது தொடர்பான மீம்ஸ்களும் இணையதளத்தில் உலாவி வருகின்றன.