அப்டி ஒரு பிளானே எங்களிடம் இல்லை..! பாஜக நிர்வாகிகள் மூச்சு விடக்கூடாது..!

கொங்குநாடு பற்றி பாஜக மேலிடம் முடிவு செய்யும்..!

அப்டி ஒரு பிளானே எங்களிடம் இல்லை..! பாஜக நிர்வாகிகள் மூச்சு விடக்கூடாது..!

கொங்குநாடு பிரச்னை என்பது தான் இப்போதைய ஊடக, சமூக வலைத்தளங்களின் வைரல் டாபிக். பாஜக தமிழ்நாட்டை பிரித்து கொங்கு நாடு என்ற தனி யூனியன் பிரதேசத்தை பிரிக்க முயற்சிப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. தமிழ்நாட்டின் பாஜக நிர்வாகிகளும் கொங்கு மண்டலத்தை தனியாக பிரித்தால் என்ன? ஏன் பிரிக்கக் கூடாது என வாய்க்கு வந்ததை எல்லாம் ஊடக விவாதங்களிலும், சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டதால், ஆத்திரமடைந்த பாஜக தலைமை, எல்.முருகனை கொங்குநாடு என அடையாளப்படுத்தியது. இதற்கு கண், காது, மூக்கு வைத்து பேச ஆரம்பித்தன அரசியல் வட்டாரங்கள். அதிமுகவும், பாஜகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ள கொங்கு பகுதியை பிரித்தால் பாஜவின் செல்வாக்கு அதிகரிக்கும் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்திருந்த நிலையில், அப்படி ஒருவேளை பிரிக்கப்பட்டால், ஏற்கனவே இந்த வரிசையில் நிற்கும், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல பகுதிகளை பிரித்து தனி மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. 

அப்படி மாநிலங்கள் பிரியும் பட்சத்தில் பாஜகவுக்கு பேரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பிரிக்கப்படும் மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் இருக்கும் பட்சத்தில் பாஜகவின் நிலை சின்னா பின்னாமாகி விடும். கொங்கு நாடு பிரச்னை குறித்து அதிமுகவும், பாஜக தலைமையும் இதுவரை வாய் திறக்காததால் எது உண்மை, எதை நம்புவது என மக்கள் மனதில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதற்கு பதில் அளிக்கும் வகையில், பாஜகவின் தமிழக ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

“கொங்குநாடு குறித்தும் தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது குறித்தும், அது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல” எனவும், இதுகுறித்து ”தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் அதிகாரப்பூர்வமான முறையில் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை” எனவும் தெரிவித்துள்ளார். 

எனவே நம்முடைய தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக பாஜக கூட்டங்களில், பத்திரிகைப் பேட்டிகளில் , சமூக வலைதளங்களில் யாரும் இது பற்றி கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாக ஏ.என்.எஸ். பிரசாத் குறிப்பிட்டுள்ளார். கொங்கு நாடு என்பது வரலாற்று ரீதியாக அன்றைய சிறு குறு நில மன்னர்கள் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அழைப்பது உண்டு என்றும், ஆனால் இன்றைய சூழ்நிலையில் கொங்குநாடு உருவாக வேண்டும் என்பது பாஜக கருத்து அல்ல என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்பது தான் பாஜகவின் லட்சியம் எனவும், நம்முடைய நல்லெண்ணங்களை சிந்தனைகளை கருத்துகளை யாரும் திரித்து வெளியிட்டு , சமூகவலைத்தளங்களின் செயல்படும் தமிழின விரோத சக்திகள் மக்களை குழப்புவதற்கு இடம் தரவேண்டாம்” என்றும் ஏ.என்.எஸ். பிரசாத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னதாக கடந்த 11-ம் தேதி நடைபெற்ற  திருப்பூர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், “கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தல்ல எனவும் ஊடகங்களில் வெளிவருவது பாஜகவின் கருத்தாக முடியாது, உயர்மட்டக் குழுவே இதுபற்றி முடிவெடுக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எதிர்கட்சிகளின் பல்வேறு கட்ட எதிர்ப்புகளுக்கு பிறகு பாஜக கொங்கு நாடு பிரச்னையில் பின்வாங்கியிருப்பதாக சமூக, அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.